மலர்ச் சாகுபடிக்கு சிறப்பு திட்டம் தேவை மலர்ச் சாகுபடியை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்துங்கள்
கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கில் மலர்ச் சாகுபடியை ஊக்குவிக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலர் சாகுபடியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் மலர்கள் சாகுபடி பரவலாக நடைபெறுகிறது. கம்பத்தை சுற்றியுள்ள சின்னமனூர், சீலையம்பட்டி, பல்லவராயன்பட்டி, புலி குத்தி, அய்யம்பட்டி, சிந்தலச்சேரி, கோட்டூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல ஊர்களில் சாகுபடி செய்யப்படுகிறது. மல்லிகை, சம்பங்கி, செண்டு, ரோஜா, செவ்வரளி உள்ளிட்ட பலவித பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. சீலையம்பட்டி மற்றும் கம்பத்தில் பூ மார்க்கெட்டுகள் உள்ளன. இங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு பூக்கள் அனுப்பப்படுகிறது.வேளாண், தோட்டக்கலை பயிர்களுக்கு விதை, இடுபொருள்கள், ரொக்க மானியம் என பல சலுகைகள் வழங்கப்படுகிறது. ஆனால் மலர் சாகுபடியாளர்களுக்கு எந்த மானியமும் வழங்குவதில்லை. சிறப்பு திட்டங்கள் இல்லை. தோட்டக்கலைத்துறையினரும் கண்டுகொள்வதில்லை. நாளுக்கு நாள் மலர் சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது. பிற வேளாண், தோட்டக்கலை பயிர்களுக்கு போன்றது மலர் சாகுபடி டியாளர்களுக்கும் நவீன தொழில்நுட்பங்கள் வழங்குவது , மானிய திட்டங்களை அறிவித்தால், இன்னமும் மலர் சாகுபடி பரப்பு அதிகமாகும். மலர் சாகுபடியாளர்களை ஊக்குவிக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீலையம்பட்டி மலர் சாகுபடியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.