| ADDED : மார் 17, 2024 06:30 AM
போடி: தேனி லோக்சபா தொகுதியில் பா.ஜ., கூட்டணியில் போட்டியிடவுள்ள அ.ம.மு.க.,பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனுக்கு பெரியகுளத்தில் சொகுசு பங்களா தேடும் பணியில் கட்சியினர் ஈடுபட்டு உள்ளனர்.தேனி தொகுதியில் ஓ.பி.எஸ்., மகனும், சிட்டிங் எம்.பி.,யுமான ரவீந்திரநாத் மீண்டும் போட்டியிட்டால் அவர் வெற்றி பெறுவது சிரமம் என்பதால் பா.ஜ., கூட்டணி வேட்பாளராக அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் போட்டியிட உள்ளார். இவர் 1999ல் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனால் இவருக்கு தொகுதி மிக பரிச்சயமானது. மேலும் முக்குலத்தோர் ஓட்டுக்களை கவரும் வகையில் தினகரன் மீண்டும் களமிறங்குகிறார்.இதனையொட்டி பெரியகுளம்,போடியில் தினகரன் தங்கி தேர்தல் பணியாற்ற சொகுசு பங்களா தேர்வு செய்ய கட்சி நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். மேலும் தேர்தல் கட்சி அலுவலகங்கள் தேனி, கோடாங்கிபட்டி சாய்பாபா நகர், பழனிசெட்டிப்பட்டி, ஆண்டிபட்டி பகுதியில் தனி வீடு பார்க்க கூறியுள்ளார்.இதற்காக போடிசுப்புராஜ் நகர், தென்றல் நகர் பகுதியில் கார் பார்க்கிங் வசதி கொண்ட பங்களாக்களை தேடுகின்றனர். பெரியகுளத்தில் தினகரன் தங்குவதற்கு ஏற்பவும், தொகுதியின் பிற பகுதிகளில் தேர்தல் பணிகள் மேற்கொள்ள வசதியான இடங்களை தேர்வு செய்ய கூறியுள்ளார்.