மூதாட்டியிடம் நகை, பணம் பறித்த ஆட்டோ ஓட்டுநர் கைது
அல்லிநகரம்: மூதாட்டியிடம் நகை, பணம் பறித்த ஆட்டோ ஓட்டுநரை, போலீசார் கைது செய்தனர். தேனி, சமதர்மபுரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை முனியம்மாள், 85, என்பவர், செப்., 5ம் தேதி மாலை, மதுரை ரோட்டில் உள்ள சர்ச்சிற்கு சென்றார். வழிபாடு முடிந்து அவ்வழியாக சென்ற ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தார். முனியம்மாளை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல், பெரியகுளம் ரோட்டில், தென்றல் நகர் பகுதிக்கு அழைத்து சென்ற ஆட்டோ ஓட்டுநர், அவர் அணிந்திருந்த, 9 சவரன் தங்க செயின், பர்சில் இருந்த, 10,000 ரூபாயை பறித்து கொண்டு, அவரை அங்கேயே இறக்கி விட்டு தப்பினார். அப்பகுதி கடைக்காரர்கள் மூலம் முனியம்மாள், தன் மகனிடம் தகவல் தெரிவித்தார். மகன் ஜான் இருதயராஜ், தாயை மீட்டு, அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், அந்த மூதாட்டியிடம் நகை, பணத்தை பறித்த பயர் சர்வீஸ் ஓடைத்தெருவைச் சேர்ந்த விக்னேஷ், 35, என்பவரை கைது செய்து விசாரிக் கின்றனர்.