உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேவிகுளம் தாலுகாவில் நாளை பந்த்; கடை அடைப்பில் வர்த்தகர்கள் குழப்பம்

தேவிகுளம் தாலுகாவில் நாளை பந்த்; கடை அடைப்பில் வர்த்தகர்கள் குழப்பம்

மூணாறு; தேவிகுளம் தாலுகாவில் நாளை (ஜூலை 31) நடக்கும் ' பந்த்' க்கு வர்த்தக சங்கம் ஆதரவு அளிக்காத நிலையில், காங்கிரஸ் கூட்டணி ஆதரவு தெரிவித்ததால் கடைகள் திறப்பது குறித்து வர்த்தகர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, கொச்சி இடையே 126 கி.மீ., தூரம் ரூ.1250 கோடி செலவில் ரோடு அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த ரோட்டில் அடிமாலி அருகே வாளாரா முதல் நேரியமங்கலம் வரை 14.5 கி.மீ., தூரம் ரோடு கடும் வனத்தின் வழியாக கடந்து செல்கிறது. அப்பகுதியில் விதிமுறைகள் மீறி பணிகள் நடப்பதாக கூறி கேரள உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பணிகள் செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு எதிராக போராட்டங்கள் நடத்த வசதியாக பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் உட்படுத்தி தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு குழு எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. அக்குழு சார்பில் தேவிகுளம் தாலுகாவில் நாளை ' பந்த்' நடக்கிறது. அதற்கு கேரளா வியாபாரி, விவசாயி ஏகோபன சமிதி எனும் வர்த்தக சங்கம் ஆதரவு இல்லை என முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர். அதேசமயம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது. அதனால் கடைகளை அடைப்பது தொடர்பாக வர்த்தகர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை