உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மரங்களை பாதுகாக்க இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்

மரங்களை பாதுகாக்க இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் மரிக்குண்டு ஊராட்சியில் கண்டமனூர் ரோடு பிரிவில் இருந்து மரிக்குண்டு வரை ரோட்டில் இருபுறங்களிலும் வளர்க்கப்பட்ட மரங்களை மின்வாரியத்தினர் எந்த வித அறிவிப்பும் இன்றி வெட்டியதால், மின்வாரியம் வெட்டிய மரங்களுக்கு பதில், பல மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இவ்வூராட்சியை பசுமையாக்கும் திட்டத்தில் கடந்த 2012ல் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு பொது மக்கள் ஊராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வந்தன. தற்போது நிழல் தரும் மரங்களாக ஓங்கி உயர்ந்து வளர்ந்துள்ளன. இந்நிலையில் இப்பகுதியில் தனியார் வீட்டுக்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக மரிக்குண்டு ரோட்டில் உள்ள 20க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி விட்டனர். இதனால் வேதனை அடைந்த பொது மக்கள் மாவட்ட நிர்வாகம், பொது பயன்பாட்டிற்கான சேவை குறைதீர் தீர்ப்பாயம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர். மரிக்குண்டு ஊராட்சி முன்னாள் தலைவர் வேல்முருகன் கூறியதாவது: கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் ஆதி, மருதம், அத்தி, அரசு, வேம்பு, புங்கை, ஆலம் வகைகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. பொது மக்கள், தன்னார்வலர்கள், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் தொலை தூரத்தில் இருந்த கிணறுகளில் நீரை இறைத்து குடங்களில் கொண்டு வந்து பல மாதங்களாக சிரமப்பட்டு மரங்கன்றுகளை வளர்த்தனர். அதன் பயனாக தற்போது மரக்கன்றுகள் மரங்களாக வளர்ந்து இப்பகுதியை பசுமையாக்கி உள்ளோம். இந்நிலையில் எவ்வித அறிவிப்பும் இன்றி மின் துறையினர் மாற்று வழி செய்யாமல் போதிய இடவசதி இருந்தும், மரங்கள் இடையூறாக இருப்பதாக தெரிவித்து வெட்டி சாய்த்து வருகின்றனர். இது பலருக்கும் வேதனை அளிப்பதாக உள்ளது. பல ஆண்டுகள் சிரமப்பட்டு வளர்த்த மரங்களை சில மணி நேரத்தில் வெட்டி சாய்ப்பது நியாயமா, வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக புதிய மரங்கன்றுகள் நடப்படுவது இல்லை. இருக்கும் மரங்களையாவது காப்பாற்ற வேண்டும் என ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி