| ADDED : நவ 23, 2025 03:39 AM
தேனி: கோம்பையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மினி ஸ்டேடியம் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளன. அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் இளைஞர் நல மேம்பாட்டிற்கு மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி பெரியகுளம் தொகுதிக்கு தேனியில் மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளது. கம்பம் தொகுதிக்கு உட்பட்ட கோம்பையில் மினி ஸ்டேடியம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த ஸ்டேடியத்தில் 200 மீட்டர் ஓடுதளம், வாலிபால், கபடி, கோகோ, கிரிக்கெட், கூடைப்பந்து, கால்பந்து மைதானங்கள் அமைக்கப்படும். அதிநவீன உடற்பயிற்சிக் கூடம்,ஓடுதளத்தின் உள்ளே ஹாக்கி, அல்லது ஹேண்ட்பால் மைதானம் அமைக்கவும். பார்வையாளர் கேலரி அமைக்கவும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான இடத்தை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைத்தனர். அரசு இதற்கு அனுமதி வழங்கியதை தொடர்ந்து ரூ.3 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. இத் திட்டத்திற்கு நிதி பகிர்வாக மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரூ.2.50 கோடியும், சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சம் சேர்த்து ரூ.3 கோடியில் அமைக்கப்படுகிறது. மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் கூறுகையில், மினி ஸ்டேடியம் கோம்பையில் அமைவதால் மாநில போட்டிகள் நடக்க வாய்ப்புள்ளது. கிராமப்புற மாணவர்கள் மத்தியில் விளையாட்டில் ஆர்வம் அதிகரிககும். பள்ளிக் கல்லுாரி மாணவர்கள், பொது மக்கள் பயன் பெறுவர்,' என்றார்.