சின்னமனுாரில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு தினமலர் செய்தி எதிரொலி
சின்னமனுார்: சின்னமனுாரில் 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடம் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து செயல்படுத்த பொதுச் சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சின்னமனுாரில் நகர்ப்புற சுகாதார நிலையத்திற்கான புதிய கட்டடம் கருங்கட்டான்குளத்தில் கட்டப்பட்டது. புதிய கட்டடம் கட்டி 3 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதாரத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அந்த புதிய கட்டடம் கடந்த மாதம் வரை செயல்படாமல் பூட்டி வைக்கப்பட்டிருந்தது.இது தொடர்பாக சுகாதாரத்துறையினரிடம் கேட்டதற்கு, 'கட்டடத்தை ஒப்படைத்துள்ளனர். ஆனால் நகர்ப் புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான டாக்டர், நர்சு பணியிடங்கள் இன்னமும் அனுமதிக்கப்படவில்லை.- எனவே புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து பயன்பாட்டிற்கு அனுமதிப்பதில் சிக்கல் உள்ளது,' என்றனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. செய்தி எதிரொலியாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. என். சி.டி. (Non Communicable disease) திட்டத்தின் கீழ் ஒரு டாக்டர், ஒரு நர்சு, ஒரு உதவியாளர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை, பிரஷர், கர்ப்ப வாய் புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.