| ADDED : பிப் 16, 2024 06:16 AM
சின்னமனூர்: சின்னமனூர் அருகே 96 வயது மூத்த தம்பதியினர் தங்களது நிலத்தை மீட்டுத் தரகோரி காந்தி சிலை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.சின்னமனூர் அருகே வேப்பம்பட்டியை சேர்ந்த ராமசாமி 96, சின்னத்தாய் 89, தம்பதியினர். இவர்கள் தங்களுடைய நிலத்தின் ஒரு பகுதியை காமாட்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்துள்ளனர். நிலத்தை வாங்கியவர், அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். இதில் அவர் வாங்கிய நிலத்துடன் சேர்த்து விற்பனை செய்யாத 50 சென்ட் நிலத்திலும் வாழை சாகுபடி செய்துள்ளார்.இது தொடர்பாக ஒடைப்பட்டி போலீசில் நில உரிமையாளர் ராமசாமி புகார் தெரிவித்தார். நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர் வாழையை அறுவடை செய்த பின் நிலத்தை தருவதாக கூறியுள்ளார். ஆனால் 8 மாதங்களாக அதிகாரிகள் அலைக்கழித்து வந்ததால் வேறு வழியின்றி முத்த தம்பதியினர் சின்னமனூர் காந்தி சிலை முன்பு நேற்று காலை அமர்ந்து தங்களின் நிலத்தை மீட்டு தர வலியுறுத்தி தர்ணாவில் ஈடபட்டனர். இன்ஸ்பெக்டர் உலகநாதன், எஸ்.ஐ. மாயன் மூத்த தம்பதியினரை சமாதானம் செய்ய முயன்றனர். அவர்கள் மறுக்கவே உத்தமபாளையம் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். தாசில்தார் சந்திரசேகரன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.இது தொடர்பாக முதியவர்களின் பேத்தி ஹேமவதி கூறுகையில், சீலையம்பட்டியை சேர்ந்த ஒருவர் எங்களின் 50 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்துள்ளார். எங்கள் நிலத்தை ஆக்கிரமிக்க வருவாய்த்துறையினர் உதவுகின்றனர். 8 மாதங்களாக போராடி வருகிறோம், வேறு வழியின்றி எனது தாத்தாவும், பாட்டியும் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர், நிலத்தை மீட்டு தர அதிகாரிகள் முன் வர வேண்டும் என்றார்.