உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் ஆக்கிரமிப்புகளால் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடி பாரபட்சம் இன்றி ஆக்கிரமிப்பு அகற்றிட வலியுறுத்தல்

தேனியில் ஆக்கிரமிப்புகளால் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடி பாரபட்சம் இன்றி ஆக்கிரமிப்பு அகற்றிட வலியுறுத்தல்

தேனி: மாவட்ட தலைநகரான தேனி நகராட்சி பகுதியில் ரோட்டோர ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.தேனி நகர் வடக்கு பகுதியில் பொம்மைய கவுன்டன்பட்டி, தெற்கே பழனிசெட்டிபட்டி, மேற்கே திண்டுக்கல் குமுளி பைபாஸ் ரோடு கிழக்கே கருவல்நாயக்கன்பட்டி வரை பரந்து விரிந்துள்ளது. நகரில் முக்கிய பகுதியாக நேரு சிலை உள்ளது. இங்கிருந்து மதுரைரோடு, பெரியகுளம்ரோடு, கம்பம் ரோடு ஆகிய பிரதான ரோடுகள் அமைந்துள்ளது. இது தவிர தேனி புதுபஸ் ஸ்டாண்டில் இருந்து அன்னஞ்சி செல்லும் பைபாஸ் ரோடும் உள்ளது. தேனி நகர்பகுதி முழுவதும் தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்டது. கம்பம், மதுரை ரோடு தேசிய நெடுஞ்சாலைத்துறை, பெரியகுளம் ரோடு மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது. தேனியில் ரோட்டோர கடைகள், கட்டுப்பாடு இன்றி இயக்கப்படும் ஆட்டோக்கள், விதிமீறி நிறுத்தப்படும் டூவீலர்கள், கார்கள் போன்றவற்றால் போக்குவரத்து இடையூறு இடியாப்ப சிக்கல் போல் உள்ளது.இது தவிர சுப்பன்செட்டித்தெரு, பகவதியம்மன்கோவில்தெரு, எடமால் தெரு உள்ளிட்ட பஜார் வீதிகளில் உள்ள நிரந்த கடைகளுக்கு முன் சிறு,சிறு தற்காலி கடைகள் ரோடு, தெருக்களை ஆக்கிரமித்து நடத்துகின்றனர். இதனால் தெருக்களில் நடந்து செல்ல கூட மக்கள் சிரமம் அடைகின்றனர். இக் கடைகளின் முன் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் கார்கள், டூவீலர்கள், ஆட்டோக்களால் மற்ற வாகனங்கள் சென்று வர முடிவதில்லை. இது தவிர பள்ளி, கல்லுாரி நேரங்களான காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரையும், மாலை 3:00 முதல் 6:00 மணிவரை போக்குவரத்து நெருக்கடியில் தேனி தவிக்கிறது. போக்குவரத்து நெருக்கடியில் தவிக்கும் தேனியில் முறையாக ஒருவழிப்பாதை என்பதே இல்லை. அதனை போலீசார் நடைமுறைப்படுத்துவது இல்லை.சில மாதங்களுக்கு முன் நகராட்சி கமிஷனர் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றுதல், ரோட்டோரங்களை ஒழுங்குபடுத்துதல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தெருவில் குடியிருப்போர் இருபுறமும் இடையூறாக வாகனங்களை நிறுத்தவதால் பிற வாகனங்கள் செல்வதில் பிரச்னை உருவாகிறது. எனவே, டூவீலர்கள், கார்களை நிறுத்த மண்டலம் வாரியாக வாகன நிறுத்தங்கள் அமைக்க ஆலோசிக்கப்பட்டது.இதன்பின் நகராட்சி அனைத்து பகுதியிலும் ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு செய்து அல்லிநகரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. அல்லிநகரத்தில் மட்டும் ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இந்நிலையில் நகராட்சி கமிஷனர் மாற்றம் போன்ற காரணத்தை கூறி பணி தொடராமல் கிடப்பில் போட்டனர். இதன் பின் ஆக்கிரமிப்பு அகற்றிய பல இடங்களில் நிரந்த கட்டடங்களை எழுப்பி வருகின்றனர். ரயில்வே கேட் முதல், பழைய பஸ் ஸ்டாண்ட், மதுரை ரோடு பங்களா மேடு வரை ரோட்டின் இருபுறமும் வாகனங்களை அதிகம் நிறுத்தி இடையூறு ஏற்படுகிறது. இது தேசிய நெடுஞ்சாலை என்பதால் அடிக்கடி வாகனங்கள் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. ஆக்கிரமிப்பு அகற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் கூறியதாவது:

பார்க்கிங் பகுதியிலும் இடையூறு

பெத்தாட்சி ஆசாத், மாவட்ட செயலாளர் ஐக்கிய கம்யூ., தேனி: தேனி நகர்பகுதியில் ஆக்கிரமிப்புகளால் விபத்துகள் அதிகரிக்கிறது. முன்பு போக்குவரத்தை முறைப்படுத்த நகர்பகுதியில் 30 போலீசார் இருந்தனர். ஆனால் தற்போது 10க்கும் குறைவாக உள்ளனர். மதுரை ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களால் இடையூறு அதிகம். பார்கிங் என அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சில கடைகாரர்கள் கம்பி, ஸ்டாண்டு வைத்து மறைப்பதால் வாகனங்களை ரோட்டில் நிறுத்தும் நிலை உள்ளது. பள்ளி நேரங்களில் நகர்பகுதிக்குள் வரும் வாகனங்களால் மாணவர்கள், பணிக்கு செல்வோர் அவதியடைகின்றனர்.

பிளக்ஸ் பேனர் வைப்பதை முறைப்படுத்துங்கள்

திருப்பதி, வடக்கு மாவட்ட செயலாளர், பா.ம.க.,தேனி: தேனி மெயின் ரோடுகள் மட்டுமின்றி தெருக்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் எதிர்காலத்தில் நகரில் மேலும் போக்குவரத்து இடையூறு அதிகரிக்கும். ரோடு, தெரு சந்திப்புகளில் வைக்கும் பிளக்ஸ், பேனர்களால் ரோட்டில் வரும் வாகனங்களை அறிய முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். உரிய அனுமதியோடு பேனர்கள் வைக்கவும், உரிய நாளில் உடனே அகற்ற வேண்டும்.

தீர்வு பாராபட்சம் இன்றி நடவடிக்கை தேவை

மாவட்ட தலைநகரில் தினமும் ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இவைகளை முறைப்படுத்த பாராபட்சம் இன்றி மெயின் ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றிட வேண்டும். பள்ளி, கல்லுாரி நேரங்களில் முக்கிய பகுதிகளில் ஒரு வழிப்பாதை நடைமுறைப்படுத்த வேண்டும். பஜார் வீதிகளில் சிறுவியாபாரிகள் கடை நடத்துவதை முறைப்படுத்த வேண்டும். டிராபிக் போலீஸ் எண்ணிக்கை அதிகரித்து முக்கிய இடங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை