| ADDED : மார் 02, 2024 04:31 AM
சின்னமனூர் : சின்னமனூர் வட்டாரத்தில் இரண்டாம் போக நெல் அறுவடை துவங்கிய நிலையில் விளைச்சலும், விலையும் திருப்திகரமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடி முல்லைப் பெரியாறு பாசனத்தில் நடைபெற்று வருகிறது. கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்கள் மூலம் தொழில்நுட்பம் , வேளாண் இடுபொருட்கள் வழங்கினர்.தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள இரண்டாம் போக நெல் அறுவடை சின்னமனூர் வட்டாரத்தில் துவங்கியுள்ளது. குறிப்பாக குச்சனூர், மார்க்கையன்கோட்டை, சின்னமனூர் பகுதிகளில் அறுவடை தீவிரமடைந்துள்ளது.வேளாண் உதவி இயக்குநர் பாண்டி கூறுகையில், ஆடு துறை 54 ரகம் எக்டேருக்கு 6.5 முதல் 7 டன் வரை மகசூல் கிடைத்துள்ளது. ஆர் என்.ஆர். ரகம் எக்டேருக்கு 4 டன் மட்டுமே கிடைத்துள்ளது. விலையை பொறுத்த வரை 63 கிலோ கொண்ட மூடை ரூ.1600 வரை கிடைத்து வருகிறது .இந்த விலை மற்றும் விளைச்சல் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்