| ADDED : டிச 05, 2025 05:42 AM
கடமலைக்குண்டு: வருஷநாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன், நகைக்கடன் தர மறுப்பதால் தனியார் நிதி நிறுவனங்களில் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். வருஷநாட்டில் செயல்படும் எம்.பி.92 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். வங்கி மூலம் வருஷநாடு, தர்மராஜபுரம், வைகை நகர், பவளநகர், வாழவந்தான்புரம், எருமைச் சுனை, முருக்கோடை, வாலிப்பாறை, தும்மக்குண்டு, ராயக்கோட்டை, வண்டியூர், சிங்கராஜபுரம் உட்பட 15க்கும் மேற்பட்ட மலைக்கிராம விவசாயிகள் தங்களுக்கு தேவையான பயிர்க்கடன், நகைக்கடன் பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் கடன் கேட்டு சென்றால் இழுத்தடிப்பு செய்வதுடன் கடன் தர மறுக்கின்றனர். இதனால் விவசாயிகள் அவசரத்திற்கு பணத் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். வேறு வழி இன்றி தனியார் நிதி நிறுவனங்களில் அதிக வட்டிக்கு கடன் பெற்று சிரமப்படுகின்றனர். விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த வங்கியில் கடன் தரவில்லை. நிதிப்பற்றாக்குறைவா அல்லது அல்லது வேறு காரணமா என்பது புரியவில்லை. தற்போது வங்கி மூலம் உரம், பூச்சி மருந்து, விவசாய இடு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு தேவைப்படும் கடன் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.