| ADDED : நவ 20, 2025 02:16 AM
மூணாறு: தனியார் பள்ளி வளாகத்தில் பஸ் மோதி சிறுமி இறந்தார். இடுக்கி மாவட்டம், செருதோணி அருகே வாழத்தோப்பு பகுதியை சேர்ந்த பென் ஜான்சன் - ஜீவா தம்பதியின் மூன்றரை வயது மகள் எய்சல்பென். அங்குள்ள தனியார் பள்ளியில் மழலையர் வகுப்பில் படித்தார். இவர், நேற்று காலை பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் பள்ளிக்கு சென்றார். பள்ளி வளாகத்தில் காலை 9:00 மணிக்கு பஸ்சில் இருந்து இறங்கிய எய்சல்பென், சக மாணவி இனாயா என்பவருடன் அருகில் நிறுத்தியிருந்த வேறொரு பள்ளி பஸ்சின் முன்புறமாக நடந்து சென்றார். அப்போது, சிறுமியர் நடந்து செல்வதை கவனிக்காமல் நிறுத்தி இருந்த பஸ்சை டிரைவர் இயக்கியதால், சிறுமியர் மீது மோதியது. இதில், பஸ் சக்கரத்தில் சிக்கி எய்சல்பென் உடல் நசுங்கி இறந்தார். இனாயாவின் கால்கள் முறிந்தன. அவரை இடுக்கி மருத்துவமனையில் அனுமதித்தனர். செருதோணி போலீசார் விசாரிக்கின்றனர்.