உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அதிகரிப்பு பாலிதீன் குப்பையை எரிப்பதால் புற்றுநோய் பாதிப்பு தடை செய்த பாலிதீன் விற்பனை தடுக்க வலியுறுத்தல்

அதிகரிப்பு பாலிதீன் குப்பையை எரிப்பதால் புற்றுநோய் பாதிப்பு தடை செய்த பாலிதீன் விற்பனை தடுக்க வலியுறுத்தல்

பெரியகுளம்: மாவட்டத்தில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பாலிதீன் குப்பையை எரிப்பதால் புற்றுநோய் பாதிப்பு அதிகரிககும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பாலிதீன் விற்பனை தடையின்றி நடப்பதால் அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. பெயரளவில் சோதனைகளால் எவ்வித பலனும் ஏற்பட வில்லை. தமிழகத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பாலிதீன் பைகளுக்கு 2019 ல் தடை விதிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து பாலதீன் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பாலிதீன் பயன்பாடு அதிகரித்துள்ளது. சரஸ்வதி, ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகை முடிந்துள்ள நிலையில் பொரி, கடலை முதல் அனைத்து பொருட்களும் பெரும்பாலும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பாலிதீன் கவர்களில் தாராளமாக பயன்படுத்தப்பட்டது. கடந்த இரு தினங்களில் மாவட்டம் முழுவதும் ஒரு டன்னுக்கும் அதிகமாக மக்காத குப்பைகள் மறுசுழற்சி செய்யாமல் நீர்நிலைகளின் கரைகளில் கொட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மளிகை கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகள், திருமணம் மண்டபங்கள், திரையரங்குகள், பேக்கரிகள், இறைச்சி, காய்கறி கடைகள் உட்பட அனைத்து இடங்களிலும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் 'கேரி பைகள்' உபயோகம் அதிகரித்துள்ளது. இவை தடையின்றி தாராளமாக கிடைப்பதால் இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் நீராதாரங்கள், வடிகால்களை அடைத்து கொள்வதால் நீரோட்டம் தடைபட்டு தேங்கி நிற்பதால் தொற்று நோய்கள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பெயரளவில் ரெய்டுகள்: மாதம் ஒரு முறை நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் டீக்கடைகள், பெட்டிக்ககடைகளில் நாங்களும் பாலிதீன், பிளாஸ்டிக்கிற்கு எதிராக ரெய்டு நடத்துகிறோம என கண்துடைப்பிற்கு சோதனை செய்கின்றனர். ஒரிருவருக்கு மிக குறைந்தளவு அபராதம் விதித்து கணக்கு காட்டுகின்றனர். ஆனால் கோடவுனில் டன் கணக்கில் கேரி பைகள் பதுக்கியுள்ளவர்களை நெருங்குவதில்லை. பெரியகுளத்தில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்கள் குடோன்கள் அதிகளவில் உள்ளது. புற்றுநோய் அபாயம்: புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் பாரதி கூறுகையில், 'குப்பையுடன் சேர்த்து கொட்டப்படும் பாலிதீன் பிரித்து எடுக்கப்படாமல் மக்கும் குப்பைகளுடன் சேர்த்து எரிக்கப்படுகிறது. இவற்றின் புகையிலிருந்து நச்சு வாயுக்கள் வெளியேறுகிறது. இவற்றை கடந்து செல்லும் போது நம்மையறியாமல் சுவாசிக்கிறோம்.இவை நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய் ,சிறுநீர்ப்பை புற்றுநோயை உருவாக்குகிறது. தடை செய்யப்பட்ட பாலிதீன் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மாவட்டத்தில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு கடந்தாண்டு 70 ஆகவும், தற்போது அதிகரித்து 90 ஆக உயர்ந்துள்ளது,' என்றார். --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ