மாவட்டத்தில் தொழுநோய் பரவலை கண்டறியும் பணியை... தீவிரப்படுத்துங்கள்: தன்னார்வலர்கள் வீடு, வீடாக சென்று பரிசோதிக்க வலியுறுத்தல்
மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் தொழு நோய் தாக்கம் கணிசமாக உள்ளது. இம் மாவட்டத்தில் கொரோனாவிற்கு முன் ஒரு ஆண்டிற்கு 100 பேர் பாதிப்பு இருந்தது. கொரோனா பாதிப்பிற்கு பின் நோய் தாக்கம் 80 ஆக குறைந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் ஆண்டிற்கு 100 என்பது 80 ஆக பாதிப்பு குறைந்துள்ளது. ஆனாலும் தொழு நோய் தடுப்பு பிரிவில் பணியாளர் பற்றாக்குறை இருப்பதால் நோய் கண்டறிதலில் தேக்க நிலை உள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் வீடுகளுக்கு சென்று மருந்து, மாத்திரைகள் வழங்கி வரும் உலக சுகாதார தன்னார்வலர்களை (World health volunteers) தொழுநோய் கண்டறிதல் பணிக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பயிற்சியும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் தொழு நோயை ஏற்படுத்தும் மைக்கோபாக்டீரியம் லெப்ரே பற்றியும், அது உடலில் பரவும் விதம், உடலில் தோலில், நரம்புகளில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி விளக்கப்பட்டது. கடந்தாண்டு பிப் . 13 ல் தமிழகம் முழுவதும் கிராமப் பகுதிகளில் 18,192 தன்னார்வலர்களும், நகர் பகுதிகளில் 4322 தன்னார்வலர்கள் தொழு நோய் கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தாண்டும் வட்டார வாரியாக தொழு நோய் கண்டறியும் பணிகள் நடந்தது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் சிறப்பு தன்னார்வலர்களை நியமித்து, கிராமங்களில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். அத்தோடு வீடுதோறும் சென்று தொழுநோய் பாதிப்பிருக்கிறதா என்பதை கண்டறிந்து, சிகிச்சை அளிக்க வேண்டும். குறிப்பாக தொற்றும் தொழு நோய் உள்ளதா என்பதை கண்டறிய கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும். தொழுநோயாளிகளுக்கு முகாம்கள் நடத்தி அவர்களுக்கு தேவைப்படும் ஆடைகள், குச்சி, செருப்பு உள்ளிட்ட பிரத்யேக பொருள்களை வழங்கிட வேண்டும். அப்போது தான் ஏற்கனவே பாதித்துள்ளவர்களின் ஊனம் கட்டுப்படுத்தப்படும். மேலும் புதிய பாதிப்புக்கள் உள்ளதா என்பதை கண்டறியும் பணிகள் முடுக்கி விடப்பட வேண்டும். இல்லையென்றால் நோய் குறையும் நிலை மாறி அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.