| ADDED : பிப் 16, 2024 06:11 AM
மின் இணைப்புகளில் தற்போது டி.எல்.எம்.எஸ்., எனும் (டிவைஸ் லாங்வேஜ் மெசேஜ் ஸ்பெஷிப்பிகேஷன்) தொழில்நுட்பம் கொண்ட மின் மீட்டர்கள் பயன்பாட்டில் உள்ளன. இவை எவ்வகையான மென்பொருட்களையும் ஏற்றுக்கொள்ளும். இந்த மீட்டர் 2016ல் இருந்து பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் வீடுகளுக்கு மின் பயன்பாட்டை அறிய வரும் கணக்கீட்டாளர்கள் எடுக்கும் விபரங்களில் சில தவறுகள் ஏற்படுகின்றன. இதனை சீரமைக்கவும், துல்லிய அளவை கணக்கிடவும், மின் கட்டண விபரங்கள் வழங்க தயாரிக்கப்படும் கட்டண ரசீதுகளை துல்லியமாக தயாரிக்கவும், மீட்டர்களில் ப்ளூ டூத் டிரான்மீட்டர்'கள் பொருத்தும் பணிகள் துவங்கி உள்ளன.இதற்கான முன்னோட்ட பணி நேற்று தேனி சிவராம்நகரில் உள்ள வீடுகளில் உள்ள மீட்டர்களில் ப்ளூ டூத் டிரான்ஸ்மீட்டர்' கருவிகள் பொருத்தும் பணிகள் துவங்கியது.தேனி கோட்ட மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் தலைமையில் நடந்தது. பின் அவர் கூறியதாவது: மின்வாரிய கணக்கீட்டாளர்களின் அலைபேசி எண்கள், கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருக்கும். தற்போது மீட்டர்களில் ப்ளூ டூத் டிரான்ஸ் மீட்டரை பொருத்த்தப்படும் போது, கணக்கீட்டு விபரங்கள் மிக துல்லியமாக கணக்கீட்டாளர் அலைபேசிக்கு கிடைத்துவிடும். அதேநேரத்தில் பயனீட்டாளரின் பதிவு செய்த அலைபேசி எண்ணில் கட்டண விபரங்கள் எஸ்.எம்.எஸ்.,களாக பதிவிறக்கம் ஆகும். கணக்கீட்டு நடைமுறையில் தவறுகள் நடைபெறாது. இந்த முன்னோட்ட பணிகளுக்காக தேனி மின் பகிர்மான கோட்டத்தில் தேனி வடக்கு, பழனிசெட்டிபட்டி, மதுராபுரி, தேனி கிழக்கு, வைகை அணை என 5 மின் பகிர்மான வட்டங்களில் தலா 4000 மின் இணைப்பு உள்ள தேர்வு செய்து ப்ளுடூத் டிரான்ஸ்மீட்டர் பொருத்தப்பட உள்ளது. சோதனை முயற்சியின் முடிவுகளை தொடர்ந்து பிற பகுதிகளுக்கு இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். இதனால் மின் கணக்கீட்டு நடைமுறைகள், கட்டண விகிதங்கள் துல்லியமாகவும், துரிதமாகவும் பெற வழிவகைமுறைப்படுத்தப்படும்.