இம்மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள் உள்ளன. இந்த உள்ளாட்சிகளில் குறிப்பிட்ட உள்ளாட்சி அமைப்புகள், போலீசாரின் அனுமதி இன்றி தேசிய நெடுஞ்சாலை, மாநிலச் சாலைகளில் தள்ளுவண்டி கடைகள் திடீர், திடீரென வைக்க அனுமதி வழங்குகின்றன. இதில் இட்லி, கோழி இறைச்சி, ஐஸ்கிரீம், குல்பி, சப்பாத்தி கார்னர் என பல்வேறு வகையான உணவுகளை விற்பனை செய்கின்றனர். இதில் காலையில் விற்பனையை துவங்கும் கூல், மோர் கடைகள் உட்பட மாலையில் துவங்கும் பிற தெருவோர கடைகளுக்கு வாடிக்கையாளர்களாக செல்லும் மக்கள் தங்கள் வாகனங்களை ரோட்டில் இடது, வலது புற எல்லைக் கோட்டிற்குள் உட்பகுதி வரை நிறுத்தி விடுவதால் விபத்துக்கள் நடக்கின்றன. இதில் தேனி மதுரை ரோடு, தேனி பெரியகுளம் ரோடு, அல்லிநகரம் முதல் பொம்மையக் கவுண்டன்பட்டி, வீரபாண்டி கோயில் வீதிகள் வரை, வீரபாண்டி வயல்பட்டி பைபாஸ் ரோடு சந்திப்பு, சின்னமனுார் பைபாஸ் முதல் பஸ் ஸ்டாண்ட் ரோடு, பஜார் முதல் மேகமலை செல்லும் ரோடு, சின்னமனுார் கம்பம் ரோடு, ஆண்டிபட்டியில் தாசில்தார் அலுவலகம் முதல் டி.எஸ்.பி., அலுவலக நுழைவாயில் வரை (2 புறங்களிலும்), கூடலுாரில் தேசிய நெடுஞ்சாலை கம்பம் ரோடு தனியார் பண்ணை அருகே, கூடலுார் - லோயர் தேசிய நெடுஞ்சாலை ரோடு, குருவனத்துப்பாலம் பகுதி, போடி காமராஜர் பஜார், பரமசிவம் கோயில் ரோடு, பி.ஹைச்., ரோடு, ஸ்டேட் வங்கி ரோடு, பெரியகுளத்தில் மூன்றாந்தல், பஜார் வீதி, பழைய பஸ் ஸ்டாண்ட் ரோடு, டெப்போ எதிர்புறம் உள்ள ரோடு, தாமரைக்குளம் அம்மன் சன்னதி ரோடு, வடுகபட்டி பகவதியம்மன் கோயில் ரோடு, தேவதானப்பட்டி அரிசிக்கடை ரோடு என்பன உள்ளிட்ட பகுதிகள் அடங்கும். இப்பகுதிகளில் விபத்துக்கள் அதிகரித்துள்ளதால், தெருவோர கடை உரிமையாளர்கள் உள்ளாட்சிகளில் அனுமதி பெற்றிருந்தாலும், அதற்கான ஆவணங்களை போலீசாரிடம் காண்பித்து ஒப்புதல் பெறுவது கட்டாயம் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. போலீஸ் உயரதிகாரிகள் கூறியதாவது: மாலை 5:00 மணி முதல் இரவு 12:00 மணி வரை தெருவோர கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் ரோட்டின் நடுவில் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, விதிமுறைகளை மீறி உணவு உட்கொண்டு செல்கின்றனர். ஒரு சில தெருவோர கடை உரிமையாளர்களின் சங்கங்கள் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்தும், உள்ளாட்சி உரிமம் பெற்று கடைகளை நடத்துகின்றனர். ஆனால் சமீபகாலமாக உரிமம் பெறாத தெருவோர கடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் விபத்துக்கள் நடக்கின்றன. இதனை தவிர்க்கவும், விபத்துக்கள் நடக்காமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். இதனால் விதிமுறைகள் படி போலீசாரின் அனுமதி பெற்று, தெருவோர கடைகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது., என்றார்.