உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் நிலவேம்பு கஷாயத்திற்கு வரவேற்பு

 ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் நிலவேம்பு கஷாயத்திற்கு வரவேற்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை சித்தா பிரிவில் வழங்கப்படும் நில வேம்பு கசாயம், கபசுர குடிநீரை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இம் மருத்துவமனைக்கு தினமும் 500க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். உள் நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெற்று திரும்புகின்றனர். இங்குள்ள சித்த மருத்துவ பிரிவில் கொரோனா தொற்று பரவிய காலத்தில் இருந்து நிலவேம்பு கஷாயம், கபசுர குடிநீர் தயாரித்து வழங்குகின்றனர். மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்கள், உடன் வருபவர்கள் காலை 8:30 மணி முதல் கிடைக்கும் கஷாயத்தை குடித்து செல்கின்றனர். கடந்த சில வாரங்களில் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல், சளி, இருமல் தொற்று அதிகரித்துள்ளது. இந்த பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவமனையில் கஷாயத்தை குடித்து செல்கின்றனர். ஆண்டிபட்டி சித்தா பிரிவினர் கூறியதாவது: நோய் எதிர்ப்பு சக்திக்காகவும், டெங்கு பாதிப்பை தடுக்கவும் 15 மூலிகைகள் கலந்த கபசுரகுடிநீர், 9 மூலிகைகள் கலந்த நிலவேம்பு கஷாயம் தினமும் 20 லிட்டர் தயார் செய்து வழங்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன் 50க்கும் குறைவானவர்களே கஷாயத்தை பயன்படுத்தினர். தற்போது தினமும் 80 முதல் 100 பேர் வரை குடித்து செல்கின்றனர். சிலர் பாட்டில்களிலும் பிடித்து மற்றவர்களுக்கு கொண்டு செல்கின்றனர். ஒரு சில நாட்களில் மாலை 4:00 மணிக்குப் பின் சிறிய அளவிலான கஷாயம் மீதமாகும். அதனை கீழே கொட்டிவிட்டு, மீண்டும் மறுநாள் புது கஷாயம் தயார் செய்து வழங்கப்படும். கபசுர குடிநீர், நிலவேம்பு கஷாயம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி