|  ADDED : மார் 17, 2024 06:24 AM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
கூடலுார்: கூடலுாரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் சீரமைப்பு பணிகள் செய்யாமல் அவசரகதியில் திறந்ததால் நெல் குவித்து வைப்பதற்கு இடமின்றி விவசாயிகள் தவித்தனர்.கூடலுாரில் 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் இருபோக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. இரண்டாம் போக நெல் சாகுபடியில் ஒழுகுபுளி, வெட்டுக்காடு, கப்பாமடை பகுதியில் நெல் அறுவடை முடிந்தன. தாமரைக்குளம், நுனிக்கரையில் அறுவடை மும்முரமாக நடந்து வருகிறது.  ஒட்டான்குளம் கண்மாய் பாசன பரப்பில் இன்னும் ஓரிரு வாரத்தில் அறுவடை துவங்கும்.ஒழுகுபுளி, வெட்டுக்காடில் அறுவடை துவங்கும் போது  கொள்முதல் நிலையம் துவக்க வேண்டும் என நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பாரதிய கிசான் சங்கம், முல்லைச்சாரல்  விவசாய சங்கத்தினர் மனு கொடுத்திருந்தனர்.இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு எந்த அறிவிப்பும் இன்றி விவசாயிகளுக்கு தகவல்தெரிவிக்காமல் அவசர கதியில் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே அரசு நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டது.இதன் வளாகப் பகுதி முட்புதர்கள் சூழ்ந்தும் ஆங்காங்கே குவிந்த பாலிதீன் பைகளால் சுகாதாரக் கேடும் ஏற்பட்ட நிலையில் இருந்தது. நெல் கொண்டுவரும் விவசாயிகள் இடவசதி இன்றி சிரமத்திற்கு உள்ளாகினர். துவங்குவதற்கு முன்பே சீரமைப்பு பணிகள் செய்திருக்க வேண்டும் எனவும் இடவசதி அதிகம் உள்ள நிரந்தர கொள்முதல் நிலையம் அமைக்க அரசு முன்வர வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.