| ADDED : டிச 26, 2025 05:39 AM
ஆண்டிபட்டி: தேனி மாவட்ட ஊராட்சிகளில் குடிநீர் இணைப்புகளுக்கான டிபாசிட், வரி பல மாதங்களாக நிலுவையில் உள்ளது. வசூல் பணிகளை தீவிரப்படுத்தினாலும், நிலுவை தொகைகளை வசூலிக்க முடியவில்லை. இதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் நிலுவைத் தொகைகளை செலுத்தாத குடிநீர் இணைப்புகளை துண்டிக்க மாவட்ட நிர்வாகம், ஊராட்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சிகளில் தண்டோரா சத்தம் எழுப்பியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இம்மாவட்டத்தில் 130 ஊராட்சிகள் உள்ளன. 'ஜல் ஜீவன்' திட்டத்தில் பெரும்பாலான வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப் பட்டுள்ளன. இத்திட்ட இணைப்புகளில் குடிநீர் கிடைக்காத பகுதிகளில் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இணைப்புகளுக்கான டிபாசிட் தொகை ரூ.ஆயிரமும், குடிநீர் கட்டணம் மாதந்தோறும் தலா ரூ.60 என, நிர்ணயிக்கப்பட்டது. கிராம ஊராட்சிகளில் வீடுகளுக்கான இணைப்பு பெற்றுள்ள பலரும் தங்கள் டிபாசிட் தொகையை செலுத்த முன் வரவில்லை. குடிநீர் கட்டணத்தையும் பல மாதங்களாக நிலுவையில் வைத்துள்ளனர். இதனால் அனைத்து ஊராட்சிகளிலும் 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை நிலுவைத் தொகை வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. ஊராட்சிகளில் வரி வசூலை ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலத்தில் வசூலித்து உடனுக்குடன் அரசுக்கு செலுத்த வேண்டும். செலுத்தப்பட்ட வரித்தொகை அந்தந்த ஊராட்சிகளின் பொது கணக்கில் வரவு வைக்கப்பட்டு பராமரிப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும். கடந்த பல மாதங்களாக ஊராட்சிகளில் வரி வசூல் தொய்வில் இருப்பதால் பராமரிப்பு பணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாக அலுவலர்கள் கூறுகையில், 'கிராம ஊராட்சிகளில் பொது மக்களிடம் தொடர்ந்து முயற்சித்தாலும் வரி வசூலில் 50 சதவீதம் கூட எட்ட முடியவில்லை. மாவட்டம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகள் மூலம் குடிநீர் டிபாசிட், வரி நிலுவைத் தொகை கோடிக்கணக்கில் உள்ளது. மாவட்ட அதிகாரிகள் வரி வசூலை தீவிரப் படுத்த தொடர்ந்து அறிவுறுத்து உள்ளனர். வரி செலுத்தாத குடிநீர் இணைப்புகள் துண்டிக்க கலெக்டர் உத்தரவில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம் சார்பில் ஊராட்சிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு தண்டோரா மூலம் சப்தம் எழுப்பியும், மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது., என்றனர்.