உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரேஷனில் பருப்பு, பாமாயில் கிடைக்காமல் பொதுமக்கள் தவிப்பு! 3 மாதங்களாக நிலவும் தட்டுப்பாட்டால் சிரமம்

ரேஷனில் பருப்பு, பாமாயில் கிடைக்காமல் பொதுமக்கள் தவிப்பு! 3 மாதங்களாக நிலவும் தட்டுப்பாட்டால் சிரமம்

போடி: தேனி மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு மூன்று மாதங்களாக வழங்க வேண்டிய பாமாயில், பருப்பு முழு அளவில் வழங்காததால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் மாதம் தோறும் வினியோகம் செய்யப்படுகிறது. அந்த மாதத்திற்கு தேவையான ரேஷன் பொருட்களை அந்த மாதத்திற்குள் எந்த தேதியில் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் மாதத்தில் 15 நாட்களுக்கு பின் செல்லும் போது பெரும்பாலான கடைகளில் பொருட்கள் காலியாகி விட்டது என கூறி மக்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர். அந்த பொருட்களை பெரும்பாலும் கடத்தல்காரர்கள் வாங்கி கடத்துகின்றனர்.வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலை விற்பதால் பொதுமக்கள் பலரும் ரேஷனில் வழங்கும் பாமாயில், பருப்பு, சர்க்கரை ஆர்வமாக வாங்குகின்றனர். குறிப்பிட்ட தேதிக்கு பின் சென்றால் இந்த பொருட்கள் கிடைப்பது இல்லை.தேர்தல் நடை முறையை காரணம் காட்டி மே மாதம் பாமாயில், பருப்பு வினியோகம் செய்யவில்லை. கடந்த ஜூன் மாதமும் பாமாயில், பருப்பு வினியோகம் செய்யவில்லை. இந்நிலையில் தடை இன்றி பருப்பு வினியோகம் செய்யப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. ஆனால் தற்போது ஜூலை முடியும் நிலையில் கடந்த இரண்டு மாதமும், தற்போது நடப்பு மாதத்திற்கான பருப்பு, பாமாயில் வழங்கப்படவில்லை. ரேஷன் கடைகளுக்கு பொதுமக்கள் சென்று கேட்டால் வரவேண்டியது உள்ளது. இன்னும் எந்த கடைக்கும் வரவில்லை. வந்தவுடன் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம் என காரணம் கூறி மக்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர். போடி, சில்லமரத்துப்பட்டி, சிலமலை, முந்தல் பகுதிகளுக்கு பருப்பு, பாமாயில் ஒதுக்கீடு செய்யவில்லை. மேலும் மண்ணெண்ணெய், கோதுமை ஒதுக்கீடு மிக குறைவு என கூறி பெயரளவிற்க்கு ஒருசிலருக்கு வினியோகம் செய்கின்றனர். ரேஷன் பொருட்கள் தட்டுப்பாட்டால் ஏழை, எளிய மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தடுப்பாடு இன்றி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது குறித்து போடி வட்ட வழங்கல் அலுவலர் கணேஷ்குமார் கூறுகையில், 'இந்த மாதம் மிகவும் குறைந்த அளவு மட்டுமே பாமாயில், பருப்பு ஒதுக்கீடு கிடைத்தது. அதனால் முழுவதும் மக்களுக்கு வினியோகம் செய்ய முடியவில்லை. இந்த மாதத்திற்கான பருப்பு, பாமாயில் பொருட்கள் வரும் ஆகஸ்ட்டில் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை