மேகமலைக்கு மாற்றுப் பாதையில் மின் ஒயர்கள் கொண்டு செல்ல திட்டம்
கம்பம்: மேகமலை பகுதிகளுக்கு செல்லும் மின் ஒயர்களை மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.மேகமலை பகுதிகளான ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு , மகாராஜா மெட்டு, தூவானம் உள்ளிட்ட பகுதிகளில் தேயிலை தோட்ட தொழிலாளர்களும், தனியார் எஸ்டேட் தொழிலாளர்களும் வசித்து வருகின்றனர். சுமார் 2 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. தனியார் தேயிலை எஸ்டேட் நிர்வாகத்திற்கு மட்டும் 900 இணைப்புகள் உள்ளன.இந்த இணைப்புகளுக்கு மின்சாரம் வண்ணாத்திபாறை துணை மின் நிலையத்திலிருந்து கொண்டு செல்லப்படுகிறது. மொத்தம் 32 கி.மீ. தூரம் உள்ள இந்த மின் வழித்தடத்தில் 6 கி.மீ. தூரம் அடர்ந்த வனப்பகுதிகள் வழியாக மின் ஒயர்கள் செல்கிறது. அடிக்கடி மரக்கிளைகள் விழுவதாலும், யானை போன்ற வன உயிரினங்களாலும் ஒயர்கள் சேதமடைந்து மின் தடை ஏற்படுகிறது. எனவே இந்த 6 கி.மீ. தூரத்திற்கு மட்டும் வண்ணாத்தி பாறையில் இருந்து இரவங்கலாறு வரை பெண்ட் ஸ்டாக் (மின் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வர அமைக்கப்பட்டுள்ள குழாய்) பக்கவாட்டில் ஆங்கிள் அமைத்து மின் ஒயர்களை கொண்டு செல்ல வாரியம் ஆய்வு நடத்துகிறது.ஆனால் இதற்கு சுருளியாறு நீர்மின்நிலைய அதிகாரிகள் அனுமதி தருவார்களா என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரித்த போது, 'மின்சாரமும், தண்ணீர் நேர் எதிர் குணம் கொண்டது. எனவே அது சாத்தியப்படாது. வேறு வழியில் கொண்டு செல்ல ஆய்வு நடத்தலாம்,' என்கின்றனர்.