புரட்டாசி 2ம் சனி வார விழா பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
ஆண்டிபட்டி: புரட்டாசி இரண்டாம் சனிவார விழாவையொட்டி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்க பெருமாள் கோயிலில் புரட்டாசி 2ம் சனி வார விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கதலி நரசிங்கப்பெருமாள், செங்கமலத் தாயார் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடந்தது. பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். ஆண்டிபட்டி மேற்கு ஓடைத்தெரு வீர ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உட்பட 21 வகையான அபிஷேகங்கள் செய்தனர். ராஜ அலங்காரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். முத்தங்கி சேவை போடி: சீனிவாசப்பெருமாள் கோயிலில் முத்தங்கி சேவை, உலர் பழங்களுடன் கூடிய அலங்காரத்தில் சீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர். சிறப்பு பூஜைகள், சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். அன்னதானம் வழங்கப்பட்டன. போடி மேலச்சொக்கநாதபுரத்தில் தொட்டராயர் ஒன்னம்மாள் கோயில், சிலமலை சீனிவாசப்பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. கோவிந்தா கோவிந்தா நாமம் ஒலித்து தரிசனம் பெரியகுளம்: வரதராஜப் பெருமாள் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாத சேவை நடந்தது. பால், தயிர்,பன்னீர், சந்தனம், இளநீர் உட்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பட்டு ஆடைகள் உடுத்தி, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு மூலவர் வரதராஜ பெருமாள் திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்திலும், உற்ஸவர் ஹனுமந்த சேவை ராமர் அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா நாமம் ஒலிக்க சுவாமி, பத்மாவதி தாயாரை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அர்ச்சகர் கண்ணன் செய்திருந்தார். பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர், ராதை, துளசி மாலைகள் நடுவே மலர் அலங்காரத்தில் காட்சியளித்தனர். அன்னதானம் வழங்கப்ப ட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ் செய்திருந்தார். தாமரைக்குளம் மலைமேல் வெங்கடாசலபதி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். பெரியகுளம் பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. சுவாமி ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். வடகரை மேதகாரப்படித்துறை ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் அபிஷேகம் ஆராதனை நடந்தது. லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.