| ADDED : டிச 08, 2025 06:17 AM
கம்பம்: தமிழக பள்ளிக் கல்வித்துறை நடத்திய தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வில் கம்பம் சக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி தேஜஸ்வினி தேர்ச்சி பெற்றுள்ளார். கடந்த அக்.11ல் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பிளஸ் 1 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு நடந்தது. தமிழகம் முழுவதும் மொத்தம் 2 லட்சத்து 70 ஆயிரத்து 508 மாணவ, மாணவிகள் எழுதினர். அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என அனைத்துப் பள்ளி மாணவ, மாணவிகளும் இதில் பங்கேற்றனர். இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1500 ஊக்கத் தொகை வழங்கப்படும். இத்தேர்வில் 100 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொன்றிற்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். இந்தாண்டு - தேர்வு எழுதிய 2 லட்சத்து 70 ஆயிரத்து 508 பேர்களில் 1500 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் கம்பம் சக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி தேஜஸ்வினி தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளியின் தாளாளர் அச்சுத நாகசுந்தர், முதல்வர் கருப்பசாமி உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர். பரிசு வழங்கப்பட்டது.