| ADDED : ஜூலை 29, 2024 12:20 AM
இம்மாவட்டத்தில் கூடலுார், கம்பம், சின்னமனுார், போடி, தேனி, பெரியகுளம் என ஆறு நகராட்சிகள் உள்ளன. கடந்த ஒராண்டிற்கும் மேலாக மாவட்டம் முழுவதும் தெரு நாய்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 200 தெரு நாய்கள் உலா வந்தன. சாதாரண நாய்கள் மட்டும் இல்லாமல் வெறிநோய் பிடித்த நாய்களும் மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்தன. இதனால் ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் நாய் கடிக்கு சிகிச்சை பெற பொது மக்கள் வரத் துவங்கினர். தெரு நாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கோரிக்கைகள் எழுந்தன.இதனால் கலெக்டர் ஷஜீவனா உத்தரவில் கடந்தாண்டு ஒரு சில நகராட்சிகளில் மட்டும் தெரு நாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்தார்கள். ஆனால் ஒரு சில நாட்களில் அந்த நடவடிக்கை முடங்கியது. இதனால் மீண்டும் சமீபத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகரிக்க துவங்கி உள்ளன. மீண்டும் உத்தரவு
இந்நிலையில் சமீபத்தில் தெரு நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நகராட்சிகளுக்கு மீண்டும் உத்தரவிடப்பட்டது. சின்னமனுார் நகராட்சியில் 210 தெரு நாய்கள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளன. முதற்கட்டமாக 50 தெரு நாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான மருந்து, ஊசிகள் வாங்கப்பட்டு உள்ளன. ஆனால் இதுவரை அதற்கான பணிகள் துவங்கவில்லை. மற்ற நகராட்சிகளிலும் பழைய நிலையே தொடர்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தேவாரத்தில் பலர் தெருநாயால் கடிபட்டு சிகிச்சையில் உள்ளனர். கலெக்டர் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லாத நிலை தொடர்வதால் பாதிக்கப்பட்ட மக்கள் விரக்தி அடைந்து உள்ளனர்.