| ADDED : நவ 25, 2025 01:33 AM
கூடலுார்: கூடலுார் அருகே கருநாக்கமுத்தன்பட்டி அரசு கள்ளர் துவக்கப் பள்ளி, வகுப்பறையில் மாணவர் இருப்பது தெரியாமல் ஆசிரியர் பள்ளியை பூட்டிச் சென்றார். மாணவரின் அலறலைக் கேட்டு 2 மணி நேரத்திற்கு பின் அருகில் இருந்த மக்கள் மீட்டனர். கூடலுார் அருகே கருநாக்கமுத்தன்பட்டி துவக்கப்பள்ளியில் எல்.கே.ஜி., முதல் 5ம் வகுப்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பல மாணவர்கள் வெளியூர்களில் இருந்து வந்து இங்குள்ள அரசு விடுதியில் தங்கி படிக்கின்றனர். இதில் கேரள மாநிலம் கடைசிக்கடவு எஸ்டேட்டில் வேலை செய்யும் கார்த்திக்கின் மகன்களான ஸ்ரீகண்ணன் 5ம் வகுப்பும், இரட்டையர்களான ஸ்ரீராம், ராம் ஆகியோர் 4ம் வகுப்பும் இங்கு படிக்கின்றனர். மாலையில் பள்ளி நேரம் முடிந்த பின்பு ராம் மட்டும் விடுதிக்கு வரவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். இந்நிலையில் பள்ளி வகுப்பறைக்குள் இருந்து மாணவனின் அலறல் சத்தம் கேட்பதாக அருகில் இருந்த மக்கள் தெரிவித்ததை தொடர்ந்து, சத்துணவு ஊழியர்கள் வைத்திருந்த சாவியால் பள்ளியை திறந்து மாணவனை மீட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.