விமரிசையாக நடந்த முருக பெருமான் திருகல்யாணம்: திரளான பக்தர்கள் தரிசனம்
தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் வள்ளி, தெய்வானையுடன் முருக பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் திருகல்யாண தரிசனம் பெற்றனர். தேனியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர்கோயில், ஸ்ரீவேல்முருகன் கோயில், பெத்தாட்சி விநாயகர் கோயில், போடி தீர்த்தத்தொட்டி விருப்பாட்சி ஆறுமுகநயினார் கோயில்களில் நேற்று திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது. தேனி சிவ கணேச கந்தபெருமாள் கோயில் கந்த சஷ்டி விழா நிறைவு பெற்று நேற்று மூலவர் சுப்பிரமணியர் விஸ்வரூபஅலங்காரத்தில் காட்சியளித்தார். சஷ்டி விரதம் இருந்த பக்தர்கள் காப்பு களைதல்நிகழ்ச்சி நடந்தது. 9:00 மணிக்கு திருக்கல்யாண சீர்வரிசை அழைத்து வரும் வைபவம் நடந்தது. அதன்பின் காலை 10:30 முதல் 11:40 மணிக்குள் நாகராஜ் சிவாச்சாரியார்தலைமையிலான 10 சிவாச்சாரியார்கள் வேத மத்திரங்கள் ஒலிக்க வள்ளி, குஞ்சரி, வடிவழகர் திருக்கல்யாணம் நடந்தது. அதனைத் தொடர்ந்து அனைத்து சுமங்கலி பெண்களும் தத்தமது திருமாங்கல்யத்தை மாற்றி கொண்டு, குங்குமம் இட்டு வணங்கினர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி டாக்டர் தியாகராஜன் தலைமையிலான நிர்வாகிகள் செய்திருந்தனர். கம்பம்: வேலப்பர் கோயிலில் கந்த சஷ்டி விழாவை தொடர்ந்து நேற்று காலை முதல் முருகப் பெருமானுக்கும், வள்ளி தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. வெண்பட்டு வேட்டியில் முருகப்பெருமானும், மஞ்சள் மற்றும் இளம் பச்சை பட்டில் வள்ளி தெய்வானையும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர். காலை 10.45 மணிக்கு முருகப் பெருமான் வள்ளி தெய்வானை கழுத்தில் மங்கல நாணை சூட்டினார். கூடியிருந்த பக்தர்கள் மலர்களை தூவி அரோகரா கோஷமிட்டனர். திருமண விருந்து நடைபெற்றது. கவுமாரியம்மன் கோயில், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில், சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில்களிலும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடந்தது. பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் காட்சியளித்தார். காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கல்யாண விருந்தினை வழக்கறிஞர் அம்பாசங்கர் வழங்கினார். காளஹஸ்தீஸ்வரர் கோயிலில்திருக்கல்யாணம் நடந்தது. சிவசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் காட்சியளித்தார். வடுகபட்டி வள்ளி தேவசேனா செந்தில்முருகன் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. ஊஞ்சலில் சுவாமி, அம்மனுடன் காட்சி யளித்தார். டாக்டர் செல்வராஜ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். கைலாசநாதர் மலைக்கோயில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் நடந்தது. கல்யாண விருந்து வழங்கப்பட்டது. கூடலுார்: கூடல் சுந்தரவேலவர் கோயிலில் நேற்று சுந்தரவேலருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. திருக்கல்யாணத்தை திருச்செந்துார் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரம்மஸ்ரீ சங்கரநாராயண சர்மா, ஸ்ரீநிவாச சர்மா, சுந்தர் சர்மா, கூடலுார் ஸ்தல அர்ச்சகர் சந்திரசேகரன் ஆகியோர் நடத்தி வைத்தனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் சீர் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து மேளதாளத்துடன் சுவாமி, வள்ளி தெய்வாணைக்கு மெட்டி அணிவித்து தாலி கட்டும் நிகழ்ச்சி விமர்சையாக நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருள் நிகழ்ச்சியும், ஊஞ்சல் உற்ஸவம் நிகழ்ச்சியும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். மூணாறு: சுப்பிரமணியசுவாமி கோயிலில் வளாகத்தில் உள்ள கார்த்திகை மஹாலில் பல வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் முருகன் மணக்கோலத்தில் எளுந்தருளினார். பக்தர்களின் சீர்வரிசையுடன் மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க அரோகரா கோஷத்துடன் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்தது. கோயில் அர்ச்சகர் சங்கரநாராயணசர்மா வள்ளி, தெய்வானைக்கு மாங்கல்யம் சார்த்தினார். கந்த சஷ்டி விழாவையொட்டி தினமும் மதியம் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்ட நிலையில் நேற்று இரவு திருமண விருந்து நடந்தது. ஏற்பாடுகளை இந்து தேவஸ்தான குழு முக்கியஸ்தர்கள் செய்தனர்.