உத்தமபாளையம் : நுாற்றாண்டு கண்ட உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து இழுத்து மூடப்படும் அபாயத்தில் உள்ளது.நுாற்றாண்டு கண்ட உத்தமபாளையம் அரசு மருத்துவமனை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1921ல் துவங்கி தாலுகா மருத்துவமனை அந்தஸ்து பெற்றது. இம் மருத்துவமனைக்கு உத்தமபாளையம் மட்டுமின்றி சுற்றியுள்ள பல கிராம மக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். 72 படுக்கைகள் கொண்ட இம் மருத்துவமனைக்கு 12 டாக்டர்கள் நியமனம் செய்யலாம். தற்போது ஐந்து டாக்டர்களே உள்ளனர். இதில் ஒருவர் மருத்துவ அதிகாரி என்பதால் சிகிச்சையளிக்க முடிவதில்லை.மற்ற நால்வரில் ஒருவர் மயக்கவியல் டாக்டர் என்பதால் தினமும் வெளிநோயாளிகள் பிரிவிற்கு வர மாட்டார். ஒரு டாக்டர் இரவு பணி பார்த்து விட்டால் பகலில் பணிக்கு வரமாட்டார். வார விடுப்பில் ஒரு டாக்டர் சென்று விடுகிறார். தற்போது ஒரு டாக்டர் மட்டுமே புறநோயாளிகள் பகுதியை கவனிக்கிறார். வெளிநோயாளிகள் பிரிவிற்கு வரும் 600 பேருக்கு ஒரு டாக்டர் எப்படி சிகிச்சையளிக்க முடியும். தினமும் சிகிச்சைக்கென அதிகளவில் பெண்கள் வந்த நிலையில் பெண் டாக்டர் இல்லை என்பதால் தங்களது பிரச்னைகளை ஆண் டாக்டரிடம் கூறி தயக்கம் காட்டி பலர் மருத்துவமனைக்கு வருவதை தவிர்த்து விட்டனர். உரிய நேரத்திற்கு வராத பணியாளர்கள்
பெண் டாக்டர் இல்லாததால் பிரசவம் எப்போதாவது அத்தி பூத்தாற்போல் நடக்கிறது. ஆப்பரேஷன் தியேட்டர் மூடப்படும் நிலையில் உள்ளது. சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளை கம்பம் அரசு மருத்துவமனைக்கும், சிலர் தேனி மருத்துவக் கல்லூரிக்கும் அனுப்பி வைக்கின்றனர். இங்குள்ள ஊசி போடும் அறை, மருந்து கட்டும் அறை, எக்ஸ்ரே பிரிவு என எதிலும் உரிய நேரத்திற்கு பணியாளர்கள் வருவதில்லை. லேப்பில் டெக்னீசியன் பற்றாக்குறையால் ஆய்வக பரிசோதனைகளும் குறைந்து விட்டது. ஆண்கள் மற்றும் பெண்கள் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வார்டுகளில் பராமரிப்பு இல்லாததால் துர்நாற்றம் வீசுகிறது. புதிதாக கட்டிய கட்டண கழிப்பறை திறக்கவே இல்லை. நோயாளர் உடன் வருபவர்கள் தங்குவதற்கென கட்டப்பட்ட கட்டடம் செடி,கொடிகள் வளர்ந்து புதர் மண்டி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. சித்தா பிரிவு ஒரளவிற்கு செயல்படுகிறது. இந்நிலையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் விபத்து அவசர சிகிச்சை பிரிவுக்கான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. டாக்டர் இல்லை என அதையும் பூட்டி வைக்க தயாராகி வருகின்றனர்.போதிய டாக்டர்கள் இல்லாததால், தங்கி சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது, பெண் டாக்டர் இல்லாததால் வெளிநோயாளிகள் எண்ணிக்கை சரியத் துவங்கியுள்ளது. கர்ப்பிணிகளுக்கு பேறுகால முன் கவனிப்பு இல்லை. ஸ்கேன்,டிஜிட்டல் எக்ஸ்ரே வசதி இல்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய பழைய எக்ஸ்ரே கருவி இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ளது. இங்குள்ளஆப்பரேஷன் தியேட்டர்களில் ஆப்பரேஷன் மற்றும் சிசேரியன் பிரசவங்கள் நடைபெறுவது இல்லை. ஏதாவது ஒன்றிரண்டு அத்தி பூத்தாற்போல வெளியில் இருந்து பெண் டாக்டர் வந்து பிரசவம் பார்க்கிறார். மருத்துவ சேவை குறைபாடு பற்றி பொது மக்கள் கருத்து. டாக்டர்கள் நியமிக்க வேண்டும்
அசோக் குமார், சமூக ஆர்வலர், உத்தமபாளையம்: உத்தமபாளையம் அரசு மருத்துவமனையை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் அதிகாரிகளும், அரசும் பார்க்கிறது. இம் மருத்துவமனைக்கு தேவையான எண்ணிக்கையில் டாக்டர்களை நியமிக்க வேண்டும். இல்லையென்றால் இந்த மருத்துவமனை இருந்தும் இல்லாதது போல ஆகி விடும். பல கிராம மக்களின் உயிர்காக்கும் மருத்துவமனை மீண்டும் முழுமையாக செயல்பட வைக்க வேண்டும். முடங்கிய வார்டுகள்
பரசுராம், ஆவண எழுத்தர், உத்தமபாளையம்: கழுதை தேய்த்து கட்டெறும்பு ஆன கதையாக இந்த அரசு மருத்துவமனை மாறி விட்டது. இங்குள்ள டாக்டரை குறை கூறி பயன்இல்லை. அவர்கள் என்ன செய்ய முடியும். டாக்டர்கள் நியமன அதிகாரம் கொண்ட மருத்துவ நலப்பணிகள் இயக்குனரகம் உத்தமபாளையத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. எம்.டி. எம். எஸ் போன்ற முதுகலை டாக்டர்கள் ஒரு பயிற்சி களமாக பயன்படுத்தி செல்கின்றார். உள் நோயாளிகள் பிரிவு, பிரசவ வார்டு என அனைத்திலும் முடங்கிய நிலை உள்ளது. தேவையான டாக்டர்களை நியமித்து புத்துயிர் ஊட்ட வேண்டும். பெண் டாக்டர் வரமறுப்பு
மருத்துவ அலுவலர் ஜின்னா, பணியில் 6 டாக்டர்கள் உள்ளோம். பெண் டாகடர் யாரும் வர மறுக்கின்றனர். ரெகுலராக வெளிநோயாளிகள் பிரிவு செயல்படுகிறது. பிரசவங்கள் பார்க்க வாரம் இரண்டு நாள் பெண் டாக்டர் வருகிறார் என்றார்.நூறாண்டுகளை கடந்து இன்றும் மிடுக்கான தோற்றத்துடன் உள்ள உத்தமபாளையம் அரசு மருந்துவமனையை புரைமைக்க வேண்டியது அரசின் அவசிய கடமையாகும். தேவையான டாக்டர்கள், பணியாளர்கள் நியமனம் செய்து கட்டடங்கள் பராமரிப்பு செய்வது அவசியம். இதே நிலை நீடித்தால் விரைவில் மருத்துவமனையை பொதுமக்கள் இழுத்து மூடும் நிலை பொதுமக்களால் அங்கேறும் அவலம் ஏற்படும்.