வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மோசடி கேரள ஏஜன்டுகள் இருவர் கைது
தேனி:தேனி பருத்தி வியாபாரி ஸ்ரீனிவாசனிடம் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என ஏமாற்றி ரூ.10 லட்சம் மோசடி செய்த கேரள ஏஜன்டுகள் இருவரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.தேனி என்.ஆர்.டி., நகர் ஜவஹர் மெயின் ரோடு பருத்தி வியாபாரி ஸ்ரீனிவாசன் 33. இவர் 2023 நவ., முகநுாலில் பங்கு வர்த்தகம் குறித்த விளம்பரம் பார்த்து பயிற்சியில் சேர்ந்தார்.பயிற்சி நடத்தியவர்கள் டெலிகிராம், வாட்ஸ் ஆப் என 2 குழுக்களில் பருத்தி வியாபாரியின் அலைபேசி எண்ணை இணைத்து குழுவில் சேர்த்தனர். தினசரி மார்க்கெட் மதிப்பு அதிகரிக்கும் நிறுவன விபரங்களை 'அப்டேட்' செய்து, இதில் முதலீடு செய்தால் 5 மடங்கு லாபம் கிடைக்கும் என்றனர். இதனை நம்பிய பருத்தி வியாபாரி, பங்குகளை வாங்க வலியுறுத்தினார். அதற்கு 'சில் பிளாட்பார்ம்' என்ற பெயரில் அப்ளிகேசன் ஒன்றை அலைபேசியில் பதிவிறக்கம் செய்யக்கூறி 'லிங்க்' அனுப்பினர். அதில், பருத்தி வியாபாரியின் ஆதார் விபரங்களை உள்ளீடு செய்து, பயன்பாட்டுக்கான ஐ.டி., பாஸ்வேர்டு அளித்தனர். அவர்கள் கூறியதை நம்பிய வியாபாரி 2024 ஜன 27, ஜன. 29ல், ஜன., 31ல் என மூன்று தவணைகளில் மொத்தம் ரூ.10 லட்சத்தை வங்கிக் கணக்கில் செலுத்தினார். பின் அவர் அப்ளிகேசனை பயன்படுத்த முடியாமல் போனது. அந்த அப்ளிகேஷன் கூகுள் பிளே ஸ்டோரிலேயே இல்லை எனவும் தெரியவந்தது. பின் 'வாட்ஸ் ஆப்'பில் குறிப்பிட்ட நபர்களை தொடர்பு கொண்டால், எதிர்முனையில் எவ்வித பதிலும் இல்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பருத்தி வியாபாரி, தேனி எஸ்.பி., யிடம் புகார் அளித்தார்.தேனி சைபர் கிரைம் எஸ்.ஐ., தாமரைக்கண்ணன் வழக்குப்பதிவு செய்தார். இதில் ஏப்., 1ல் கேரளா, கோழிக்கோட்டை சேர்ந்த ஏஜன்ட் முகமதுடேனிஷை கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமினில் உள்ளார். அவர் அளித்த தகவல் மூலம் வாட்ஸ் ஆப் குழுக்களில் பருத்தி வியாபாரியை ஏமாற்றி பணம் பறித்த கேரளா கோழிக்கோடு திருவம்பாடியை சேர்ந்த முகமது யாசிர் 28, அதேபகுதி காரச்சேரியை சேர்ந்த முகமது அல் ஜவ்ஹர் 28, ஆகிய இரு ஏஜன்ட்களை போலீசார் கேரளா சென்று கைது செய்தனர்.