உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூலவைகை ஆற்றின் நீர் வரத்தால் உயர்கிறது வைகை அணை நீர்மட்டம்

மூலவைகை ஆற்றின் நீர் வரத்தால் உயர்கிறது வைகை அணை நீர்மட்டம்

ஆண்டிபட்டி: தேனி மாவட்டத்தில் மூல வைகை ஆற்றின் நீர் வரத்தால் வைகை அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.வைகை அணைக்கு முல்லைப் பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர் வரத்து கிடைக்கிறது. கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்துள்ள பகுதிகளில் பெய்யும் மழையால் மூலவைகை ஆற்றில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. பெரியாறு அணையில் திறக்கப்படும் நீரும் வைகை அணைக்கு சென்று சேர்கிறது. வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பெரியாறு பாசனப்பகுதி திருமங்கலம் கால்வாயில் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்கள், பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன நிலங்களின் முதல் போகத்திற்கும் நீர் வெளியேறுகிறது.மழையால் பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறைந்ததால், வினாடிக்கு 900 கன அடி வீதம் கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நீர் அக்.25ல் வினாடிக்கு 700 கன அடியாகவும், மறுநாள் வினாடிக்கு 500 கன அடியாகவும் குறைக்கப்பட்டது. தற்போது அதே அளவு தொடர்கிறது. அணையில் இருந்து வெளியேறும் நீரின் அளவை விட அணைக்கான நீர்வரத்து அதிகம் இருப்பதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நீர் வரத்து வினாடிக்கு 1191 கன அடியாக உள்ளது. அக்.22ல் 57.91 அடியாக இருந்த வைகை அணை நீர்மட்டம் நேற்று 59.68 அடியாக உயர்ந்தது (மொத்த உயரம் 71 அடி). மூல வைகை ஆற்றில் இருந்து அணைக்கு வினாடிக்கு 336 கன அடி நீர் சென்றடைகிறது. அணையில் இருந்து மதுரை, தேனி, ஆண்டிபட்டி, - சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ