உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி /  தீயணைப்பு அதிகாரியை சிக்க வைக்க ஆபீசில் பணம் வைத்தவர் சுற்றிவளைப்பு

 தீயணைப்பு அதிகாரியை சிக்க வைக்க ஆபீசில் பணம் வைத்தவர் சுற்றிவளைப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துணை இயக்குநரை, லஞ்ச வழக்கில் சிக்க வைக்க, அவரது அலுவலகத்தில், 2.50 லட்சம் ரூபாய் பணம் வைத்தவர், மும்பை தாராவியில் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துணை இயக்குநர் சரவணபாபு, 50. இவரது அலுவலகம், என்.ஜி.ஓ., - பி., காலனியில் உள்ளது. நேர்மையான அதிகாரியான இவரை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கவைக்க, தீயணைப்பு துறையின் சில உயர் அதிகாரிகள், லஞ்ச ஒழிப்புத்துறையின் சில அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து திட்டமிட்டனர். நவ., 17 நள்ளிரவில், மர்ம நபர் சரவணபாபுவின் அலுவலகத்திற்குள் நுழைந்து, ஆறு கவர்களில் 2.50 லட்சம் ரூபாயை வைத்து சென்றார். மறுநாள், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி, கணக்கில் வராத பணம் எனக்கூறி, அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். சரவணபாபு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நள்ளிரவில் மர்ம நபர், துணை இயக்குநர் அலுவலகத்துக்குள் நுழைந்து பணம் வைக்கும், 'சிசிடிவி' கேமரா காட்சிகள் வெளியாகின. போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவில், துணை கமிஷனர் வினோத் சாந்தாராம் தலைமையில், நான்கு தனிப்படைகள் விசாரித்தன. தீயணைப்பு துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகளை, லஞ்ச வழக்கில் சிக்கவைக்கும் முயற்சியை சில ஆண்டுகளாக சில தீயணைப்பு உயர் அதிகாரிகள் வழக்கமாக செய்து வந்தது தெரிந்தது. இதற்காக, கோவையில் பணிபுரியும் ஒரு தீயணைப்பு அலுவலர், ஒவ்வொரு சம்பவத்திலும், 5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருப்பது தெரிந்தது. சரவணபாபு அலுவலகத்தில் பணம் வைத்தவர் மேலப்பாளையம் விஜய், 31, என, அடையாளம் தெரிந்தது. அவர் மீது சில வழக்குகள் உள்ளன. இவர், டூ - வீலர், கார் பைனான்ஸ் செலுத்தாதவர்களிடம் வாகனங்களை பறிமுதல் செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு பணம் கொடுத்து இச்செயலை செய்யும்படி கூறிய டவுன் பகுதியை சேர்ந்த ஒரு தீயணைப்பு வீரரும், தற்போது போலீசார் விசாரணையில் சிக்கியுள்ளார். இதில் ஈடுபட்ட துாத்துக்குடி தீயணைப்பு வீரர் ஆனந்த், ஏற்கனவே கைது செய்யப்பட்டார். மும்பை தாராவியில் இருந்த விஜயை தனிப்படையினர் நேற்று கைது செய்து, திருநெல்வேலி அழைத்து வந்தனர். விஜயை இச்செயலில் ஈடுபடுத்திய தீயணைப்பு வீரரிடம் தீவிர விசாரணை நடக்கிறது. மேலும் சில தீயணைப்பு உயர் அதிகாரிகள் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சிக்கக்கூடும் என, விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி