உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பிசான சாகுபடிக்காக மணிமுத்தாறு அணை திறப்பு

பிசான சாகுபடிக்காக மணிமுத்தாறு அணை திறப்பு

அம்பாசமுத்திரம்:நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களின் பிசான சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து நேற்று முன்தினம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு பிரதான கால்வாய் நீரொழுக்கு விதிகளின் படி இக்கால்வாயில் உள்ள நான்கு ரீச்களுக்கும் ஆண்டுதோறும் சுழற்சி முறையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.கடந்தாண்டு 3வது மற்றும் 4வது ரீச்களுக்கு முன்னுரிமை அளித்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.நடப்பாண்டில் 1வது மற்றும் 2வது ரீச்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். ஆனால், தற்பொழுது நல்ல மழை பெய்து அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளதால் நான்கு ரீச்களிலுள்ள 23,152 ஏக்கர் விளை நிலங்களும் பயனடையும் வகையில் மணிமுத்தாறு அணையில் இருந்து நேற்று முன்தினம் பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. சபாநாயகர் அப்பாவு, அணையின் தலை மதகு 'கீ'யை வழங்கி தண்ணீரை திறந்துவிட்டார். வினாடிக்கு 450 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படும் திறன் கொண்ட இக்கால்வாயில் 200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தேவைக்கேற்ப வரும் மார்ச் 31 முடிய 82 நாட்கள் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.நேற்று முன்தினம் காலை நிலவரப்படி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 115.14 அடியாகும்.அணைக்கு வினாடிக்கு 1,728 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு சர்ப்ளஸ் ஷட்டர் வழியாக 1,500 கன அடி தண்ணீரும், பெருங்கால் வழியாக 20 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது.தண்ணீர் திறப்புக்கு பின் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:மணிமுத்தாறு அணை முழுமையாக நிரம்பியுள்ளதால் 4 ரீச்களிலுள்ள 347 குளங்கள் வழியாக 23,152 ஏக்கர் விளை நிலங்கள் பயனடையும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வெள்ளநீர் கால்வாய் சோதனை ஓட்டத்தால், கொழுமடையில் உடைப்பு ஏற்படவில்லை. ஒட்டு மொத்த வெள்ள நீர் வந்ததால் உடைப்பு ஏற்பட்டது. உடைப்பு தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது. நிரந்தர தடுப்பு சுவர் கட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அணைகள் இணைப்பு திட்டம்

பாபநாசம் - மணிமுத்தாறு அணைகள் இணைப்பு திட்டம் ஆய்வில் உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குளங்களில் தற்காலிக சீரமைப்புப் பணி 100 சதவீதம் முடிந்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ