| ADDED : ஜன 27, 2024 02:15 AM
திருநெல்வேலி:காலமுறை சம்பளம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் நல பணியாளர்கள் ஜன., 31ல் சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.1990ல் அப்போதைய தி.மு.க., அரசு 25 ஆயிரம் மக்கள் நல பணியாளர்களை நியமித்தது. அதன் பின் அ.தி.மு.க., அரசு 1991, 2001, 2011ல் மூன்று முறை மக்கள் நலப்பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு 2022 ஜூலையில் ஏற்கனவே பணிபுரிந்த 10 ஆயிரத்து 300 மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் ஊராட்சிகளில் பணி நியமனம் செய்தது.இந்நிலையில் மாநிலம் முழுதும் உள்ள மக்கள் நலப்பணியாளர்கள் காலமுறை சம்பளம் வழங்க வேண்டும், பணியின் போது இறந்தவர் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி 2023 நவம்பர் 22 ல் திருவாரூரிலும், டிசம்பரில் திண்டுக்கல்லிலும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.அடுத்தகட்டமாக ஜன. 31ல் சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக சங்க மாநில தலைவர் செல்லப்பாண்டியன், பொதுச்செயலாளர் புதியவன், பொருளாளர் ரெங்கராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.