உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புழல் ஏரி கால்வாயில் ரூ.10 கோடியில் தடுப்பு சுவர்

புழல் ஏரி கால்வாயில் ரூ.10 கோடியில் தடுப்பு சுவர்

சென்னை: நிரந்தர வெள்ள தடுப்பு நடவடிக்கையாக, புழல் ஏரி உபரிநீர் கால்வாயில் தடுப்பு சுவர் கட்டும் பணிகளை, நீர்வளத்துறை துவங்கியுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதன் மொத்த கொள்ளளவு 3.30 டி.எம்.சி., ஆகும்.புழல் ஏரிக்கு, சோழவரம் மற்றும் பூண்டி ஏரிகளில் இருந்து நீரை எடுத்துவரும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. எனவே, ஆண்டு முழுதும் புழல் ஏரியில் நீர் இருக்கும் வகையில், நீர்வளத்துறை, நீர் மேலாண்மையை மேற்கொண்டு வருகிறது.அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை காலத்தில் புழல் ஏரி நிரம்பி, அதில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படும். இதற்காக, செங்குன்றத்தில் இரண்டு ஷட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் வழியாக வெளியேற்றப்படும் நீர், உபரிநீர் கால்வாய் வாயிலாக, வங்க கடலுக்கு அனுப்பப்படுகிறது.இந்த கால்வாய், சாமியார்மடம், தண்டல்கழனி, பாபா நகர், வடகரை, திருநீலகண்டன் நகர், வடபெரும்பாக்கம், கொசப்பூர், முல்லைவாயில் வழியாக சென்று, சடையங்குப்பத்தில் கடலில் கலக்கிறது.இந்த கால்வாய் 11 கி.மீ., நீளம் உடையது. இந்த கால்வாயில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்வது வழக்கமாக உள்ளது.கடந்தாண்டு, 'மிக்ஜாம்' புயல் காலத்தில் பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டது. எனவே, நிரந்தர வெள்ள தடுப்பு நடவடிக்கையாக, கால்வாயை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, முதற்கட்டமாக, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிதியில், புழல் ஏரி உபரிநீர் திறப்பு மதகில் இருந்து 300 மீட்டருக்கு இரண்டு புறங்களிலும், கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கப்பட உள்ளது.இதுமட்டுமின்றி, அங்கு நீர் தேங்கும் வகையில் சிறிய அளவிலான கட்டமைப்பும் ஏற்படுத்தப்பட உள்ளது.கரைகள் சேதம் அடைந்த பகுதிகளில், அதை பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான பணிகளை துவங்கியுள்ள நீர்வளத்துறையினர், செப்டம்பர் மாதத்திற்கு முன்பாக முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ