| ADDED : மே 27, 2024 06:44 AM
ஐ.சி.எப்.: அயனாவரம், கான்ஸ்டபிள் தெருவில், 'பவித்ரா' என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அதன் அருகிலுள்ள குப்பை தொட்டியில், நேற்று காலை, துாய்மை பணியாளர்கள் குப்பை சேகரிக்க வந்தனர்.அப்போது அதில், மனித மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடு இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த துாய்மை பணியாளர்கள், உடனே ஐ.சி.எப்., போலீசாருக்கு தகவல் அளித்தனர்.போலீசார் வந்து, மண்டை ஓடு, கைகளை கைப்பற்றி விசாரித்தனர்.இதில், அந்த அடுக்குமாடி குடியிருப்பில், ரயில்வே மருத்துவமனையில் பயிற்சி பெறும் மாணவர்கள், 5க்கும் மேற்பட்டோர் இருப்பது தெரிந்தது.அவர்களிடம் விசாரித்ததில், மருத்துவ பயிற்சிக்காக மண்டை ஓடு மற்றும் கைகளை பயன்படுத்தியது தெரிந்தது.பின், அவற்றை குப்பை தொட்டியில் வீசியதாக தெரிந்தது.