திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், வரும் 27 முதல் 31ம் தேதி வரை ஆடிக்கிருத்திகை விழா நடைபெறுகிறது. இதற்காக, ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் காந்தி தலைமையில், முன்னேற்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்புக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம், காவல் துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை, போக்குவரத்துத் துறை, தீயணைப்புத் துறை, மின்சாரத் துறை உள்ளிட்டவற்றின் வாயிலாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை வழங்கினர்.இதில், பக்தர்கள் வசதிக்காக, 120 இடங்களில் குடிநீர் வசதி, 160 இடங்களில் கழிப்பறை வசதி, 60 இடங்களில் தற்காலிக குளியல் அறைகள், 160 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், 10 இடங்களில் பொது தகவல் அறிவிப்பு மையம், 24 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. குப்பை மற்றும் பூமாலைகள் உடனுக்குடன் அகற்ற கோவில் நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் வாயிலாக, 900 தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவில் வளாகம், மலைப்பாதை முழுதும் போதிய மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 250 கூடுதல் பேருந்துகள், ஐந்து மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.கூட்டத்தில், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., எஸ்.சந்திரன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன், ஹிந்து அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர், மாவட்ட எஸ்.பி., சீனிவாசபெருமாள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்கள் பங்கேற்றனர்.