உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாழடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் வேளாண் அலுவலக கட்டடம்: ஊழியர்கள் பீதி ஆழ்ந்த துாக்கத்தில் பொ.ப.துறை அதிகாரிகள்

பாழடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் வேளாண் அலுவலக கட்டடம்: ஊழியர்கள் பீதி ஆழ்ந்த துாக்கத்தில் பொ.ப.துறை அதிகாரிகள்

திருத்தணி : திருத்தணி பழைய தர்மராஜ கோவில் அருகே வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம், 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு, 27 ஊராட்சிகளில் இருந்து தினமும் விவசாயிகள் பயிர் சம்பந்தமான ஆலோசனைகள் மற்றும் அரசு மானியங்கள் பெறுவதற்கு வந்து செல்கின்றனர்.மேலும், வேளாண் உதவி அலுவலர்கள் மற்றும் விவசாயிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி, உதவி இயக்குனர் தலைமையில் மாதந்தோறும் நடந்து வருகிறது.இதுதவிர, அரசு விவசாயம் தொடர்பான திட்டங்கள் அறிவித்தவுடன் வேளாண் உதவி இயக்குனர், இந்த ஊராட்சிகளில் இருந்து விவசாயிகளை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு வரவழைத்து, அரசு திட்டம் குறித்தும், அதை எவ்வாறு பெறுவது குறித்தும் வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் பொதுப்பணித் துறையினர் வேளாண் உதவி இயக்குனர் கட்டடத்தை முறையாக பராமரிக்காததால், தற்போது கட்டடம் முழுதும் சேதமடைந்தும், கட்டடத்தில் செடிகள் வளர்ந்தும், கதவு, ஜன்னல்கள் உடைந்தும் காணப்படுகிறது.மேலும், நாளுக்கு நாள் கட்டடமும் விரிசல் ஏற்பட்டு வருகிறது. பழுதடைந்த கட்டடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால், இங்கு பணிபுரியும் ஊழியர்கள் ஒருவித அச்சத்துடனேயே வேலை செய்து வருகின்றனர்.மேலும், இந்த அலுவலகத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரத்தில் அலுவலக வளாகத்தில் 'குடி'மகன்கள் மது அருந்திவிட்டு, பாட்டில்கள் மற்றும் உணவு பொருட்களை வீசிவிட்டு செல்கின்றனர்.எனவே, வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் நுழைவாயிலில் இரும்பு கதவு அமைத்து, கட்டடத்தை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ