உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆவடி சிட்டி போக்குவரத்து விதிமீறலில் டர்ட்டி போக்குவரத்து விதிமீறலில் டர்ட்டி

ஆவடி சிட்டி போக்குவரத்து விதிமீறலில் டர்ட்டி போக்குவரத்து விதிமீறலில் டர்ட்டி

ஆவடி, :சென்னை -- திருத்தணி நெடுஞ்சாலையில், திரும்பும் திசையெல்லாம் ஆட்டோக்கள் அணிவகுத்து நிற்பதால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து, இடதுபுறம் வெளியேறும் பகுதியில் ஹோட்டல் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. அங்குள்ள கடைகளுக்கு வரும் இருசக்கர வாகனங்களால், ஏற்கனவே நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

குற்றச்சாட்டு

இந்நிலையில், அங்கு விதிமீறி நிறுத்தப்படும் ஆட்டோக்களால், அரசு பேருந்துகள் உள்ளே இருந்து வெளியே வர முடியாமல், ஒவ்வொரு நாளும் திணறி வருகின்றன.ஆட்டோக்கள் சாலையில் நிறுத்தப்படுவதால், பயணியர் மட்டுமின்றி வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். அதேபோல், ஆவடி நேரு பஜார் அருகில், அதிக அளவில் விதிமீறி ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், பேருந்திற்காக காத்திருக்கும் மக்கள், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.இது குறித்து நம் நாளிதழில், கடந்த 2022ல், படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, போக்குவரத்து போலீசார் அங்கு 'நோ பார்க்கிங்' பதாகை வைத்தனர்.அதையும் மீறி தினமும், அங்கு ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. ஆவடி போக்குவரத்து போலீசார் அதை கண்டும் காணாமல் இருந்து வருவதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.ஆட்டோ ஓட்டுனர்கள் இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, கண்டபடி சாலையில் ஆட்டோக்களை நிறுத்தி அட்டூழியத்தில் ஈடுபடுகின்றனர். ஆவடி பேருந்து நிறுத்தம் மட்டுமின்றி, அனைத்து முக்கிய சாலைகளிலும், புதிதாக ஆட்டோ 'ஸ்டாண்ட்'கள் முளைத்து வருவதால், ஆவடியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடும் நடவடிக்கை

எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்து உயர் அதிகாரிகள், விரிவான ஆய்வு ஒன்றை நடத்தி, ஆவடியில் விதிமீறி ஓடும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்து உள்ளது.இதுகுறித்து ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் கூறியதாவது:கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், ஒவ்வொரு காவல் நிலைய எல்லையில் ஓடும் ஆட்டோக்கள் குறித்து போலீசார் விபரங்கள் சேகரித்து வைத்திருந்தனர். இதனால், விதிமீற லில் ஈடுபடுவோருக்கு பயம் இருந்தது.தற்போது, போலீசார் கண்டுகொள்ளாததால், விதிமீறலில் ஈடுபடுவது அதிகரிக்கிறது. ஸ்டாண்ட் ஆட்டோக்கள் சாலையில் விதிமீறி நிறுத்தப்படுவது இல்லை.வெளியில் இருந்து ஆவடிக்கு சவாரி வரும் ஆட்டோக்கள் தான், இவ்வாறு விதிமீறலில் ஈடுபடுகின்றன.போலீசார் இதை தொடர்ந்து கண்காணித்து, அபராதம் விதிக்க வேண்டும். மேலும், ஆவடியில் ஓடும் ஆட்டோக்களின் விபரங்களை சேகரித்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:விதிமீறி இயங்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுத்தால், உயரதிகாரிகளிடம் எங்கள் மீது புகார் தெரிவிக்கின்றனர்.அதேபோல், அபராதம் விதிக்கும் முன், அரசியல் கட்சியினரால் 'அழுத்தம்' தரப்படுவதால், எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

போலீசார் பற்றாக்குறை

கடந்த காலங்களில், வாகன எண்ணைக் கொண்டு, விதிமீறும் வாகனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அனைவருக்கும் பயம் இருந்தது. தற்போது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் அபராதம் விதிக்கக் கூடாது என, உயரதிகாரிகள் அழுத்தம் தருவதால், நடவடிக்கை எடுக்க முடியவில்லை.போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை உள்ளதால், தொடர்ந்து கண்காணிக்க முடியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை