| ADDED : ஜூன் 28, 2024 10:35 PM
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தீர்த்த குளமான தக்கான் குளம், அரக்கோணம் கூட்டு சாலையை ஒட்டி அமைந்துள்ளது. பிரம்ம தீர்த்தம் எனப்படும் இந்த குளத்திற்கு தினசரி நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குளக்கரையை ஒட்டி குப்பை அதிகளவில் குவிந்து வருகிறது.இந்நிலையில், அரக்கோணம் கோட்ட அஞ்சல் துறை ஊழியர்கள் சார்பில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தக்கான் குளக்கரையில் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், அரக்கோணம் கோட்ட துணை கண்காணிப்பாளர் மஞ்சுநாத், சோளிங்கர் துணை அஞ்சலக அதிகாரி சரவணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். தக்கான் குளக்கரை, அனுமன் சன்னிதி, முடி காணிக்கை வளாகம், நாகர் சன்னிதி உள்ளிட்ட இடங்களில் துாய்மை பணி மேற்கொண்டனர்.