| ADDED : மே 30, 2024 12:34 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் லோக்சபா ஓட்டும் எண்ணும் பணியில், முகவர் மற்றும் வேட்பாளர் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறை குறித்து கலெக்டர் அறிவுரை வழங்கினார்.திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுக்கள் பெருமாள்பட்டு, ஸ்ரீராம் மந்திர் பள்ளியில், ஜூன் 4ல் எண்ணப்படுகிறது.ஓட்டு எண்ணும் பணிக்கு வரும் வேட்பாளர் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:ஓட்டு எண்ணும் மையத்திற்கு வரும் வேட்பாளர், முதன்மை முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். அதை அணிந்தபடியே ஓட்டு எண்ணும் இடத்திற்கு செல்ல வேண்டும். அடையாள அட்டை இல்லாதோர் அனுமதிக்கபட மாட்டார்.வேட்பாளர், முதன்மை முகவர்கள், ஜூன் 4ம் தேதி காலை 7:00 மணிக்குள் வரவேண்டும். காலை 8:00 மணிக்கு தபால் ஓட்டுக்களும், 8:30 மணிக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர ஓட்டுக்கள் எண்ணிக்கை ஆரம்பிக்கப்படும்.முகவர்கள் மொபைல் போன், ஐ-பேட், லேப்டாப் மற்றும் அல்லது ஒலி அல்லது ஒளிப்பதிவு கருவி அனுமதிக்கப்படாது. வேட்பாளர் உபயோகத்திற்காக ஒரு வாகனத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். முகவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மேஜைகளை தவிர ஓட்டு எண்ணும் அறைக்குள் செல்ல அனுமதியில்லை. ஓட்டு எண்ணப்படும் மேஜைக்கு அருகில், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டு, தேர்தல் பொது பார்வையாளர் கண்காணிப்பார். ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், ஒரு மேஜைக்கு ஒரு முகவர் வீதம், 14 ஓட்டு எண்ணும் மேஜை உட்பட, மொத்தம் 23 பேர் நியமனம் செய்யப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், ஆவடி மாநகர காவல் துணை கமிஷனர் ஐமன் ஜாமல், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.