ஆவடி: ஆவடி மாநகராட்சியில் ஜெ.பி.எஸ்டேட் பகுதியில் 'ஜெட் ராடிங்' இயந்திரம் வாயிலாக பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் பணி நேற்று நடந்தது.இந்த பணியில், ஆவடி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டனர். பகல் 12:00 மணி அளவில், ஆவடி, அருந்ததிபுரத்தைச் சேர்ந்த கோபிநாத், 25, என்பவர், 'ஜெட் ராடிங்' இயந்திரத்தை இறக்கி, பாதாள சாக்கடையை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.அப்போது விஷவாயு தாக்கி, கோபிநாத் பாதாள சாக்கடையில் மயங்கி விழுந்துள்ளார். சக ஊழியர் அவரை மீட்க முயற்சித்தனர்; ஆனால் முடியவில்லை.விரைந்து வந்த ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்களில், இளவரசன் என்பவர் பாதுகாப்பு உடை அணிந்து, 20 அடி ஆழ பாதாள சாக்கடைக்குள் இறங்கி கோபிநாத்தை மீட்டார். உடனடியாக, ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதிக்கையில் இறந்தது தெரிய வந்தது. இதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.சம்பவ இடத்தில், ஆவடி மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி, ஆவடி போலீஸ் துணை கமிஷனர் அய்மான் ஜமால் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.வழக்கு பதிவு செய்த ஆவடி போலீசார், ஒப்பந்த நிறுவன மேலாளரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவி மற்றும் ஆவடி, ஜெ.பி.எஸ்டேட்டைச் சேர்ந்த மேற்பார்வையாளர் ஆனந்த் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த கோபிநாத்துக்கு, மனைவியும், 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
ஓராண்டிற்குள் 4 பேர் பலி
ஆவடி மாநகராட்சியில், கடந்த ஓராண்டிற்குள் ஒப்பந்த ஊழியர்கள் மூவர் உட்பட நான்கு பேர் விஷ வாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆவடி, கிரி நகரில் கடந்தாண்டு செப்., 7ம் தேதி, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது, பட்டாபிராமைச் சேர்ந்த மோசஸ், 45, ஆவடியைச் சேர்ந்த தேவன், 50, ஆகியோர் உயிரிழந்தனர்.கடந்த ஜன., 22ம் தேதி, திருமுல்லைவாயில், தனியார் குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியில், மோட்டார் இறக்கும் போது விஷவாயு தாக்கி, சோழம்பேடைச் சேர்ந்த சுரேஷ், 48, என்பவர் உயிரிழந்தார். அந்த வரிசையில் கோபிநாத்தின் பலியும் பதிவாகி உள்ளது.
அரசிற்கு கடும் கண்டனம்
கோபிநாத் இறந்தது தொடர்பாக, தேசிய துாய்மை பணியாளர் கமிஷன் தலைவர் வெங்கடேசன், 'பேஸ்புக்' பக்கத்தில், தமிழக அரசுக்கு தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:துாய்மை பணியாளர்கள், மலக்குழாய் மற்றும் சாக்கடை குழாயில் இறங்கி, விஷவாயு தாக்கி இறப்பதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. தமிழக அரசு, இதை தடுப்பதற்கு எவ்வித முன்முயற்சியும் எடுக்காமல் இருப்பது கண்டனத்திற்கு உரியது.மலக்குழாய் மற்றும் சாக்கடை குழாயை சுத்தம் செய்வதற்கு நவீன உபகரணங்கள் வாங்கி பயன்படுத்தாமல், பணியாளர்களை சாகடித்துக் கொண்டிருப்பது வெட்கக்கேடு. நவீன உபகரணங்கள் வாங்க பணம் இல்லாத அரசு, 'கார் ரேஸ்; பைக் ரேஸ்' நடத்துவதற்கு மட்டும் பணத்தை செலவு செய்வது, கடும் கண்டனத்திற்கு உரியது.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.