| ADDED : ஜூன் 01, 2024 06:04 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் நகரில் கடந்த சில நாட்களாக, பகல், இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு நிலவுவதால், நகரவாசிகள் புழுக்கத்தால் திணறி வருகின்றனர்.திருவள்ளூரில் கத்திரி வெயில் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. பகலில் அனல் காற்று வீசுவதால், இருசக்கர வாகனத்தில் செல்வோர், முகமூடி அணிந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வெயில் கொடுமையை சமாளிக்க முடியாமல் வீட்டில் பெண்கள், முதியோர் மற்றும் நோயாளிகள் இருக்கும் நிலையில் பகலில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அரை மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுகிறது.இரவு நேரத்தில், 2 மணி நேரத்திற்கு ஒரு முறை அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் மின்விசிறி இயங்காததால், நகரவாசிகள் புழுக்கத்தால் பகலில் வீட்டில் இருக்க முடியாமலும், இரவில் துாங்க முடியாமலும் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, மின்வாரியத்தினர் சீரான மின்வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகரவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.