| ADDED : ஜூன் 28, 2024 02:46 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில், கிருஷ்ணா கால்வாய் மேல் கட்டப்பட்ட பாலத்தில், செடிகள் வளர்ந்தும், விரிசல் ஏற்பட்டுள்ளது.சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து புழல் ஏரிக்கு 'லிங்க் கால்வாய்' வாயிலாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. கால்வாய் அருகில், திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையில் பாலம் கட்டப்பட்டுள்ளது.இந்த சாலை வழியாக, திருவள்ளூர், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார் மற்றும் திருத்தணி பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் செல்ல, ஊத்துக்கோட்டை சாலையில் அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக கனரக வாகனங்கள், பேருந்துகள் அதிகளவில் செல்வதால், பாலத்தின் உறுதி தன்மை பாதிக்கிறது. தற்போது, பாலத்தின் இருபுறமும், செடிகள் வளர்ந்துள்ளன. மேலும், பாலத்தின் பக்கவாட்டு சுவரும் விரிசல் அடைந்து, காட்சிஅளிக்கிறது.இதனால், பாலம் மேலும் சேதமடைந்து உடைந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏதும் நேரிடுவதற்குள், இந்த பாலத்தை நெடுஞ்சாலைதுறையினர் சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.