| ADDED : ஜூன் 24, 2024 05:09 AM
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில், புல்லுார் காப்புக்காடு அமைந்துள்ளது. இந்த காப்புக்காட்டின் மேற்கில் ஆந்திர மாநிலம், சித்துார் வனப்பகுதியிலும், கிழக்கில் தமிழக வனப்பகுதியாகவும் அமைந்துள்ளன.இடைப்பட்ட கணவாய் வழியாக தார்சாலை அமைக்கப்பட்டுள்ளளது. இந்த வழியாக தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த பகுதியில் செயல்பட்டு வரும் குவாரிக்கு ஏராளமான கனரக வாகனங்களும் வந்து செல்கின்றன.போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த மார்க்கத்தில் மிகவும் சிக்கலான சாலை திருப்பங்களும் அமைந்துள்ளன.இதனால், ஏராளமான விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதை தடுக்கும் விதமாக சாலை திருப்பங்களை, வாகன ஓட்டிகளுக்கு உணர்த்தும் விதமாக தடுப்பு கற்கள் நடப்பட்டுள்ளன. இந்த தடுப்பு கற்கள் தற்போது பெயர்ந்து சிதறி கிடக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் அவதிப்பட்டு வருகின்றனர். சாலை திருப்பத்தை கவனிக்க முடியாமல் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. சாலையோர கற்களை சீரமைக்கவும், பிரதிபலிக்கும் போக்குவரத்து சிக்னல்களை நிறுவ வேண்டும் எனவும் பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.