| ADDED : மே 11, 2024 11:51 PM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில், ஒதப்பை கிராமத்தில், ஏற்கனவே இருந்த தரை பாலத்தின் இடதுபுறம் 2019ல் 12.10 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவங்கி, 2023ம் ஆண்டு முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பாலம், 204 மீட்டர் நீளத்தில், 8.00 மீட்டர் அகலம், பாதசாரிகள் நடக்க, 1.5 மீட்டர் அகலத்தில் உள்ளது.இந்த பாலத்தின் வழியே தினமும், 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் வழியில் பாலத்தின் மேல் ஏறும் சாலை ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது.இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் இருட்டான இந்த இடத்தில் வாகனங்கள் தடம் புரண்டால் பாலத்தில் இருந்து கீழே விழும் அபாயம் உள்ளது.எனவே, பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஒதப்பை மேம்பாலத்தில் செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்படுத்த வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.