| ADDED : மே 11, 2024 01:13 AM
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு காவல் நிலையம், சார் - பதிவாளர் அலுவலகம், கருவூலம் உள்ளிட்டவை, நகருக்குள் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்தன.இந்நிலையில், சூரராஜபட்டடை அருகே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், சொந்த கட்டடங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டன. இந்த அலுவலகங்களை ஒட்டி, சுடுகாடு அமைந்துள்ளது.பள்ளிப்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிவாசிகள், இந்த அலுவலகங்களுக்கு பல்வேறு சேவைகளுக்காக வந்து செல்கின்றனர். இந்த மார்க்கத்தில் போக்குவரத்து வசதியும் குறைவு.பள்ளிப்பட்டில் இருந்து நகரிக்கு செல்லும் பேருந்துகளில், பகுதிவாசிகள் இந்த அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், சூரராஜபட்டடை சுடுகாட்டு நுழைவாயில் பகுதியில் தற்போது புதிதாக பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு வருகிறது. சுடுகாட்டு நுழைவாயிலில் கட்டப்பட்டு வருவதால், பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். பயணியர் நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம்
கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சிக்குப்பட்டது மணவாளநகர். இங்குள்ள நிழற்குடையை பயன்படுத்தி பகுதிவாசிகள் ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், வேலுார் உட்பட பல பகுதிகளுக்கு சென்று வந்தனர்.இந்நிலையில் இப்பகுதியில் உள்ள திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை 57ல் மணவாளநகர் - மேல்நல்லாத்துார் வரை உள்ள இருவழிச் சாலையை, 43 கோடி ரூபாய் மதிப்பில் நான்குவழி சாலையாக மாற்றும் பணி, கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் துவங்கி நடந்து வந்தது. இதையடுத்து இப்பகுதியில் பயணியர் நிழற்குடை அகற்றப்பட்டது. இந்நிலையில் பணிகள் முடிந்து ஓராண்டாகியும் இன்று வரை நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பகுதிவாசிகள் சுட்டெரிக்கும் வெயிலில் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டுமென, மணவாளநகர் பகுதிவாசிகள் மற்றும் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.