| ADDED : மே 03, 2024 11:57 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், மங்காபுரம் காலனியைச் சேர்ந்தவர் அருள், 35. இவர் அதே பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் பம்ப் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்தார். நேற்று காலை, குடிநீர் மேல்நிலைத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்காக மின்மோட்டாரை இயக்க காலனி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதி சேர்ந்த சேட்டு, 40, என்பவர் சாலையோரம் சென்ற மின்கம்பியை தெரியாமல் தொட்டதால் மின்சாரம் பாய்ந்து அலறிக் கொண்டிருந்தார். அப்போது, அருள் கட்டையால் மின்கம்பியை அடித்த போது, மின்கம்பி அறுந்து அருள் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து, மயங்கி விழுந்தார். சேட்டு கையில் காயத்துடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் அருள் மற்றும் சேட்டுவை திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர் அருளை பரிசோதனை செய்த போது, ஏற்கனவே அருள் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.