| ADDED : மே 05, 2024 11:01 PM
திருத்தணி: மருத்துவ படிப்பிற்கான 'நீட்' தேர்வுக்கு திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்துார் போன்ற இடங்களில் இதுவரை தேர்வு மையம் செயல்பட்டு வந்தது. இதனால் திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள மாணவர்கள், குறைந்த பட்சம், 45 கி.மீ., முதல், 90 கி.மீ., துாரம் பயணம் செய்து மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் இருந்து வந்தது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான நீட் தேர்வு நேற்று நடந்தது. மாணவர்கள் நலன் கருதி முதல்முறையாக திருத்தணி அருகே உள்ள முருக்கம்பட்டு பகுதியில் இயங்கி வரும் சக்தி பப்ளிக் ஸ்கூல் பள்ளியில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டது.இங்கு, மொத்தம், 123 மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. 6 மாணவர்கள் தேர்வு எழுத வராததால், 117 மாணவர்கள் தேர்வு எழுதினர். முதல் முறையாக தேர்வு மையம் ஏற்படுத்தியதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் கடும் பரிசோதனைக்கு பிறகே மாணவர்கள் தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர்.