| ADDED : மே 09, 2024 01:31 AM
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், சிவாடா காலனியைச் சேர்ந்தவர் முனுசாமி, 50. இவர், அதே பகுதியில் அரசு நத்தம் புறம்போக்கு சர்வே எண்: 36/3ல் உள்ள 1 ஏக்கர் 4 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலத்தை வீடுகள் இல்லாதவர்களுக்கு வீட்டுமனைகளாக பிரித்து வழங்க வேண்டும் என, காலனி மக்கள் வருவாய் துறையினருக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.தொடர்ந்து, வருவாய் துறையினர் வீடுகள் இல்லாதவர்கள் குறித்து கணக்கெடுத்து வீட்டுமனைகளாக உருவாக்கி, பிரித்து கொடுக்க தீர்மானித்து, அதற்கான பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று முனுசாமி அரசு புறம்போக்கு நிலம் எனக்கு தான் சொந்தம் எனக் கூறி, வருவாய் துறையினரை நிலத்தை அளக்க அனுமதிக்கவில்லை.இதனால், ஆத்திரமடைந்த சிவாடா காலனியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், முனுசாமி ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்தை மீட்டு இலவச வீட்டுமனைகள் வழங்க வேண்டும் என, திருத்தணி - நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.மேலும், அவ்வழியாக வந்த தனியார் பேருந்தையும் சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கனகம்மாசத்திரம் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.