உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கொசஸ்தலையில் தேங்கிய தண்ணீரால் பாலப்பணி...பாதிப்பு! � பருவமழைக்கு முன் முடிக்க 30 கிராமத்தினர் எதிர்பார்ப்பு

கொசஸ்தலையில் தேங்கிய தண்ணீரால் பாலப்பணி...பாதிப்பு! � பருவமழைக்கு முன் முடிக்க 30 கிராமத்தினர் எதிர்பார்ப்பு

� சோழவரம், கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் தேங்கியதால், உயர்மட்ட பாலப்பணிகளில் தொய்வு ஏற்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டு பருவமழைக்கு முன் பணிகளை முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, 30 கிராமங்களை சேர்ந்தவர்கள் எதிர்பார்க்கின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மடியூர், வழுதிகைமேடு, பசுவன்பாளையம், கண்ணியம்பாளையம், அட்டப்பாளையம், நெற்குன்றம் உள்ளிட்ட, 30 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி, மருத்துவம், தொழில், வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு, பொன்னேரி சென்று செல்கின்றனர்.இந்த கிராமங்களுக்கும், பொன்னேரி பகுதிக்கும் இடையே கொசஸ்தலை ஆறு பயணிக்கிறது. ஆற்றில் தண்ணீர் இல்லாத போது, இருசக்கர வாகனங்களிலும், நடந்து செல்வோரும் ஆற்றில் உள்ள வழித்தடங்களில் கடந்து செல்வர்.வன்னிப்பாக்கம், சிறுவாக்கம், நாலுார் கம்மார்பாளையம் ஆகிய இடங்களில் ஆற்றில் இதற்கான வழித்தடங்கள் உள்ளன.நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர், மீஞ்சூர் அல்லது காரனோடை வழியாக, 15 - 22 கி.மீ., தொலைவு சுற்றிக் கொண்டு செல்கின்றனர்.மழைக்காலங்களில் ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டு, ஆறு மாதங்கள் வரை அதில் தண்ணீர் தேங்கியிருக்கும். அச்சமயங்களில், இருசக்கர வாகனங்களில் பயணிபோர், மீஞ்சூர் அல்லது காரனோடை வழியாக செல்லும் அவலநிலை உள்ளது.இதனால் கிராமவாசிகள் அவசர உதவிகளை பெற முடியாமல் தவிக்கின்றனர். கிராமவாசிகளின் சிரமம் கருதி, மடியூர் -- நாலுார் - கம்மார்பாளையம் கிராமங்கள் இடையே, கொசஸ்தலை ஆற்றில் உயர்மட்ட பாலம் அமைக்க, நபார்டு நிதியுதவியின் கீழ், 18.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.அதற்கான கட்டுமான பணிகள், 2022ல் துவக்கப்பட்டன. ஆற்றின் குறுக்கே, 210 மீ., நீளம், 12மீ., அகலத்தில், இரு கரைகளிலும் தலா ஒன்று, ஆற்றின் நடுவே ஒன்பது என, மொத்தம் 11 பில்லர்களுடன் பாலம் அமைகிறது.பில்லர்கள் அமைக்கும் பணிகள் முடிந்து, அதன்மீது ஓடுதள பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் தேங்கியதால், பாலப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள முடியாமல் கைவிடப்பட்டது. தற்போதும், பாலம் அமையும் இடங்களில் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி இருப்பதால், தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. ஓடுதளத்திற்காக பில்லர்கள் மீது விடப்பட்ட இரும்பு கம்பிகளும் துருப்பிடித்து வருகின்றன.பாலப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு இருப்பதால், திட்டமிட்டபடி இந்த ஆண்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர முடியுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.இதுகுறித்து கிராமவாசிகள் கூறியதாவது:நீண்டகால கோரிக்கையின் பயனாக, இந்த பாலம் அமைகிறது. தற்போது, ஆற்றில் நீர் இருப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதற்கேற்ப கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இந்த ஆண்டு மழைக்காலத்திற்குள் பாலப் பணிகளை முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தால், இக்கிராமவாசிகள் நிம்மதியடைவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:துாண்கள் மீது மொத்தம், 10 பிளாட்பாரம் அமைக்க வேண்டும். அதில் மழைக்கு முன், நான்கு முடிக்கப்பட்டன. தற்போது, மடியூர் பகுதிகளில் கட்டுமான பணிகளை துவக்கி உள்ளோம்.தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் உள்ளது. பொக்லைன், ஜே.சி.பி., ரெடிமிக்ஸ் வாகனங்கள் சென்றுவர முடியாது.தண்ணீர் இல்லாத பகுதிகளில் அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ள உள்ளோம். உயர்மட்ட பாலத்திற்கான கட்டுமான பணிகளில், தற்போது, 70 சதவீதம் முடிந்துள்ளன. திட்டமிட்டபடி, 2024 செப்டம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி