திருவள்ளூர் : திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அருகில், கட்டப்பட்ட, புதிய பேருந்து நிறுத்தத்தில் அடிப்படை வசதி இல்லாததால், பயணியர் வெயிலில் நிற்கின்றனர்.திருவள்ளூர் ஜே.என்.சாலை அருகில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, நாளொன்றுக்கு, 3,000க்கும் மேற்பட்டோர் பல்வேறு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.மேலும், நகராட்சி, பொதுப்பணித்துறை, கோட்டாட்சியர் அலுவலகங்கள் அமைந்துள்ளன. இவர்கள் தங்கள் பணி முடிந்து, தங்களின் ஊர்களுக்கு ரயில் நிலையம், பேருந்து நிலையம் செல்கின்றனர். இவர்களுக்கு வசதியாக, திருவள்ளூர் அரசு மருத்துவமனை அருகில், திருவள்ளூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது.பணி முடிந்தும், பயணியர் அமர இருக்கை வசதி இல்லை. இதனால், பொதுமக்கள் புதிய பேருந்து நிறுத்தத்திற்கு வராமல், ஏற்கனவே செயல்பட்டு வந்த, பழைய பேருந்து நிறுத்தத்தில் வெயிலில் காத்திருந்து, ஆட்டோ, பேருந்துகளில் பயணிக்கின்றனர்.எனவே, நகராட்சி மற்றும் காவல் துறையினர் புதிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல, வசதி ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.